திண்டுக்கல்: திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து இரவு நேரத்தில் பஸ் ஸ்டாண்டிற்கு தனியாக வரும் பயணிகளிடம் மர்ம நபர்கள் போதையில் ரகளை ஈடுபடுவது,கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்வது,அடித்து உதைப்பது போன்ற பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். போலீசார் ரோந்து பணியில் ஈடுபடாமலிருப்பதால் தினந்தோறும் ரயில் பயணிகள் இரவு நேரங்களில் அச்சத்துடனே செல்லும் நிலை தொடர்கிறது. போலீசார் இதை தடுக்க வேண்டும்.திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் வழியே தினமும் 100க்கு மேலான ரயில்கள் செல்கின்றன. ஆயிரக்கணக்கில் பயணிகள் இங்கிருந்து வெளி மாவட்டங்கள்,மாநிலங்களுக்கு பயணிக்கின்றனர். இவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் வகையில் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்திற்குள் ரயில்வே பாதுகாப்பு படை,ரயில்வே போலீசார் என இரு பிரிவு போலீசார் பணியில் உள்ளனர். இங்கு வரும் பயணிகள் பஸ் ஸ்டாண்ட் செல்வதற்கு ஆட்டோவை பயன்படுத்துகின்றனர். பகல் நேரங்களில் அரசு பஸ்களில் செல்கின்றனர். இரவு 9:00 மணிக்கு மேல் திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து பஸ் ஸ்டாண்ட் செல்ல அரசு பஸ்கள் இல்லை. நள்ளிரவு,அதிகாலை நேரத்தில் வரும் பெண்கள்,வயதானவர்கள் என தனியாக வரும் பயணிகள் பஸ் ஸ்டாண்டிற்கு நடந்து செல்கின்றனர். இதை சாதகமாக பயன்படுத்தும் மர்ம நபர்கள் தனியாக வரும் பயணிகளை குறிவைத்து ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் மது போதையில் நின்று தகராறில் ஈடுபடுகின்றனர்.இதுமட்டுமன்றி பயணிகள் அணிந்திருக்கும் நகைகள்,அலைபேசி,பணம் உள்ளிட்ட பொருட்களை பறித்து கொண்டு அடித்து உதைக்கின்றனர். சில நேரங்களில் கத்தி முனையில் மிரட்டுகின்றனர். ரயில்வே ஸ்டேஷன் வெளி பகுதியில் நடக்கும் குற்ற சம்பவங்கள் குறித்து ரயில்வே போலீசாரும் சரி பாதுகாப்பு படையினரும் கவலைபடுவதில்லை. வடக்கு போலீசார் கட்டுப்பாட்டில் ரயில்வே ஸ்டேஷன் வருகிறது. அவர்களும் எப்போதாவது ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். எல்லா நேரங்களிலும் வராததால் மர்ம நபர்கள் துணிந்து குற்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு சின்னாளப்பட்டியை சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் உத்தமராஜா 44, திருச்சி சென்றுவிட்டு ரயிலில் திண்டுக்கல் வந்தார். பஸ் ஸ்டாண்ட் செல்வதற்காக நடந்து வந்தார். அப்போது ரயில்வே ஸ்டேஷன் அருகே டூவீலரில் வந்த 3 பேர் இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம்,அலைபேசி,கைக்கடிகாரம் உள்ளிட்ட பொருட்களை பறித்துகொண்டு தாக்கினர். வாலிபர்களிடமிந்து தப்பிய அந்த நபர் ரயில்வே ஸ்டேஷன் வாசலில் பயணிகளுக்காக காத்திருக்கும் ஆட்டோ டிரைவர்களிடம் உதவி கேட்டுள்ளார். ஆட்டோ டிரைவர்கள் வருவதற்குள் 3 பேர் கும்பல் தப்பியது. காயமடைந்த உத்தமராஜா திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றார். போலீசில் புகாரளிக்காததால் இதில் ஈடுபட்ட 3 பேரும் மேலும் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நிலை தான் தொடரும் . இதைத்தடுக்க போலீசார் இரவு நேரத்தில் ரயில்வே ஸ்டேஷன் மட்டுமன்றி நகர் பகுதியில் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். இதோடு இரவில் ரயில் பயணிகள் பஸ் ஸ்டாண்ட் செல்வதற்கு போக்குவரத்து கழகத்தினர் கூடுதல் பஸ் டிரிப்களை இயக்க முன் வர வேண்டும். பாதுகாப்பை உறுதிப்படுத்துங்க
செல்வம்,வழக்கறிஞர்,திண்டுக்கல்: திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் வழியாக தான் எல்லா ஊர்களுக்கும் ரயில்கள் செல்ல வேண்டி உள்ளது. இதுமட்டுமின்றி திண்டுக்கல் மாவட்டத்தில் சுற்றுலா தலமான கொடைக்கானல்,கோயில் நகரமான பழநியும் உள்ளதால் ஏராளமான பயணிகள் வருகின்றனர். இவர்கள் அதிகாலை,இரவு நேரத்தில் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து பஸ் ஸ்டாண்டிற்கு செல்ல பஸ்கள் இல்லாமல் தடுமாறுகின்றனர். இதுமட்டுமில்லாமல் ஒன்றரை கிலோ மீட்டர் துாரம் நடந்து பஸ் ஸ்டாண்டிற்கு செல்வதால் அவதிபடுகின்றனர். போலீசார் ரோந்து பணியில் இரவில் ஈடுபடாமலிருப்பதால் குற்ற சம்பவங்கள் ரயில்வே ஸ்டேஷன் சுற்று பகுதிகளில் அதிரித்துள்ளது. இனியாவது போலீசார் ரோந்து பணியை துரிதப்படுத்தி பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். நடவடிக்கை எடுக்கப்படும்
பிரதீப்,எஸ்.பி.,திண்டுக்கல்: திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் பகுதிகளில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.