| ADDED : ஜூன் 04, 2024 06:19 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தாய், மனைவி, 3 மகள்களுடன் எரியோடு கெச்சானிப்பட்டியை சேர்ந்த நாதஸ்வர கலைஞர் சரவணன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடக்கும் குறைதீர்க்கும் கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் மக்கள் கோரிக்கை மனுக்களை போட்டுச் செல்வதற்காக மனு பெறும் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.இதில் பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை போட்டுச்செல்கின்றனர்.இந்நிலையில் கையில் கோரிக்கை பதாகையுடன் தாய்,மனைவி, 3 மகள்களுடன் எரியோடு கெச்சானிப்பட்டியை சேர்ந்த நாதஸ்வர கலைஞர் சரவணன் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.அவர் கூறியதாவது: திண்டுக்கல் தனியார் நிதி நிறுவனத்தில் வீடு கட்டுமான கடன் கேட்டு விண்ணப்பித்தேன். பிப்.,ல் ரூ.13 லட்சம் கேட்டு விண்ணப்பித்த நிலையில் அந்த நிறுவனம் சார்பில் ரூ.2.11 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டது.எஞ்சிய பணம் வழங்கவில்லை. பணத்தை விடுவிக்க கோரி 4 மாதமாக முறையிட்டோம். இதுவரை பணம் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் ரூ.13 லட்சத்துக்கான வட்டியை 4 மாதமாக வசூலித்து வருகின்றனர். கடன் தொகையை முழுமையாக வழங்காமல் வட்டியை மட்டும் வசூலித்து வரும் தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என்றார்.