| ADDED : ஜூன் 25, 2024 06:00 AM
திண்டுக்கல் : நீர்நிலையில் தொழிற்பேட்டை அமைக்காதீங்க, மகன் கைவிட்டதால் முதியவர்கள் தர்ணா என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் காரணமாக திண்டுக்கல்லில் நடந்த நேற்றைய குறைதீர் கூட்டத்தில் 380 பேர் முறையிட்டனர்.கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் பல்வேறு சூழ்நிலைகளில் உயிரிழந்த 9 குடும்பங்களின் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சத்திற்கான காசோலை கலெக்டரின் விருப்புரிமை நிதியிலிருந்து 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் இயந்திரங்களை கலெக்டர் வழங்கினார். இது போல் திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலகில் 25 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்த 16 தாசில்தார்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன. மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயசித்ரகலா, ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல அலுவலர் முருகேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் கோட்டைக்குமார், முருகன். செல்வம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.ஒட்டன்சத்திரம் கொத்தயத்தைச் சேர்ந்த பொதுமக்கள் முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் மோகன்குமார் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், கொத்தயம் அரளிக்குத்து குளத்தில் சிட்கோ தொழில்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீராதாரங்களை அழித்து எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது என உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்கள் உள்ளன. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சிட்கோ தொழில்பேட்டை அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். நிலக்கோட்டை குல்லலக்குண்டுவைச் சேர்ந்த மகாமுனி 77. இவரது மனைவிசிட்டுவள்ளி 65. இவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த நிலையில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை அழைத்து கலெக்டரிடம் மனு அளிக்க வைத்தனர். அதில், எங்களது சொத்தை மகனுக்கு தானமாக வழங்கினேன். சொத்தை தானம் பெறும் போது என்னையும், என் மனைவியையும் நல்ல முறையில் பாதுகாத்து பராமரித்துக் கொள்வதாகவும், செலவுக்கு மாதாமாதம் பணம் தருவதாகவும் வாக்குறுதி கொடுத்தார். ஆனால் பராமரிக்காமல் விட்டு விட்டார். ஆர்.டி.ஓ., விடம் புகார் அளித்தபோது அவர் எங்களது வயதைக் கருத்தில் கொண்டு மூத்த குடிமக்கள், பெற்றோர் பராமரிப்பு சட்டத்தின் கீழ் மாதம் ரூ.3000 எனது வங்கிக் கணக்கில் செலுத்த உத்தரவிட்டார். ஆனால் 3 வருடங்களாகியும் எங்களுக்கு பணம் தரவில்லை. இந்நிலையில் மகனுக்கு தானமாக வழங்கிய எனது சொத்தின் பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.