உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நிறுத்தப்பட்ட பஸ் சேவை; சுகாதாரக்கேட்டில் பாறைக்குளம் ராமநாதபுரத்தில் கிராம மக்கள் பரிதவிப்பு

நிறுத்தப்பட்ட பஸ் சேவை; சுகாதாரக்கேட்டில் பாறைக்குளம் ராமநாதபுரத்தில் கிராம மக்கள் பரிதவிப்பு

-வடமதுரை, : நிறுத்தப்பட்ட பஸ் சேவை, பழுதான ரோடு, துர்நாற்றம் வீசும் பாறைக்குளம், துர்வாரப்படாத வடிகால் என காணப்பாடி ராமநாதபுரம் கிராம மக்கள் சிரமப்படுகின்றனர்.காணப்பாடி ஊராட்சியை சேர்ந்த ராமநாதபுரம் வடமதுரை, சாணார்பட்டி, திண்டுக்கல் என 3 ஒன்றியங்களின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. வடமதுரையில் இருந்து சாணார்பட்டி ஒன்றியத்தை சேர்ந்த புகையிலைப்பட்டி செல்லும் வழித்தடத்தில் ஒன்றியத்தின் கடைசி கிராமமாக அமைந்துள்ளது. மகளிருக்கு அரசு டவுண் பஸ்களில் இலவச பயண சலுகை வழங்கப்பட்ட பின்னர் இவ்வழியே நாள் ஒன்றுக்கு 5 முறை இயக்கப்பட்ட தனியார் பஸ் சேவை வசூல் குறைவு என காரணம் கூறி நிறுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் இருந்து புகையிலைபட்டி வழியே வடமதுரைக்கு ராமநாதபுரம் வழியே காலை 10:00 அளவில் ஒரே ஒரு டிரிப் இயக்கப்படும் அரசு பஸ் சேவையும் வந்தால் தான் நிச்சயம். இதுவும் வாரத்தில் ஒரிரு நாட்கள் மட்டுமே வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் 2 கி.மீ., துாரம் வடமதுரை அக்கரைப்பட்டி ரோட்டிற்கு நடந்து சென்று பஸ் ஏறும் நிலை உள்ளது. திண்டுக்கல், மா.மூ.கோவிலுார் பகுதிக்கு செல்ல உதவும் ராயப்பன்பட்டி வன்னியப்பட்டி ரோடு சேதமடைந்துள்ளதால் சிரமம் அதிகம் உள்ளது. ராமநாதபுரத்தில் இருக்கும் பிரதான வீதியில் வடிகால் கட்டமைப்பு முழுமையாகாமல் இருப்பதால் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடை ஏற்படுத்துகிறது .

- ரோடு பணியில் அலட்சியம்

வி.பாலுச்சாமி, விவசாயி, ராமநாதபுரம்: குப்பமுத்துபட்டி, ராமநாதபுரம் புகையிலைப்பட்டி களத்து வீடுகளில் வசிக்கும் மாணவர்கள் அதிகளவில் வன்னியப்பட்டி, பெரியகோட்டை வழியே மா.மூ.கோவிலுார் பள்ளிக்கு சைக்கிளில் சென்று வருகின்றனர். அதோடு இங்கிருந்து வேலை வாய்ப்பு, மருத்துவமனை போன்ற காரணங்களுக்காக திண்டுக்கல் பகுதிக்கு செல்ல இந்த ரோட்டையை அதிகம் பயன்படுத்துகிறோம். இந்த ரோடு ராயப்பன்பட்டி துவங்கி வன்னியபட்டி வரை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக சிரமத்தை தருகிறது. இந்த ரோட்டை வடமதுரை, சாணார்பட்டி ஒன்றிய பகுதியினர் அதிகம் பயன்படுத்தும் நிலையில் ரோடு திண்டுக்கல் ஒன்றிய பகுதிக்குள் இருப்பதாலும் பராமரிப்பதில் அலட்சிய போக்கு உள்ளது.

-மக்களுக்கு அதிக சிரமம்

பி.போஸ், தொழிலாளி, ராமநாதபுரம்: விழாக்கள், விசேஷங்கள் நடத்துவதற்கு வசதியாக சமுதாய கூடம் இல்லாமல் மக்கள் அதிக சிரமப்படுகின்றனர். இங்கு அரசு சார்ந்த இடங்கள் அதிகம் இருப்பதால் சமுதாய கூடம் கட்ட இடம் எளிதாக கிடைக்கும். மயானத்திற்கு செல்லும் பாதையில் கல்லாறு குறுக்கிடுகிறது. மழை காலத்தில் ஆற்றில் நீர் தேங்கி நிற்கும்போது கடந்து செல்வதில் அதிக சிரமம் உள்ளது. ஏற்கனவே திண்டுக்கல்லில் இருந்து புகையிலைப்பட்டி, ராமநாதபுரம் வழியே சிங்காரக்கோட்டைக்கு இயக்கப்பட்ட தனியார் பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் அதிக சிரமப்படுகின்றனர்.

-குளத்தில் நானல்தட்டை

என்.வீரப்பன், தொழிலாளி, ராமநாதபுரம்: திருவிழா காலங்களில் பயன்படுத்தப்படும் கிணறு தற்போது சுற்றுச்சுவர் இல்லாமல் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. ஆற்றில் நீர் பெருகி ஓடும் நேரங்களில் கிணறு சேதமடைவது வழக்கமாக உள்ளது. கிணற்றிற்கு அரசு சார்பில் சுற்றுச்சுவர் கட்டி தர வேண்டும். இங்குள்ள பாறைக்குளத்தில் நானல்தட்டை என்ற செடி குளத்தை ஆக்கிரமித்து அதிகளவில் வளர்ந்துள்ளது. குளத்தில் இருக்கும் நீரை வெளியேற்றி செடிகளை அகற்றினால் தேங்கும் நீர் சுத்தமானதாக இருக்கும்.

ரோடு பணிக்கு முயற்சி

ஏ.பாண்டி, ஊராட்சி தலைவர், காணப்பாடி: போதுமான அளவில் குடிநீர், தெருவிளக்கு வசதிகள், ரேஷன்கடை, அங்கன்வாடி மையம், நாடக மேடை, சிமென்ட் ரோடு, பேவர் பிளாக் கற்கள் பதித்தல் என பல பணிகள் நடந்துள்ளன. சேதமான ரோடு பகுதி திண்டுக்கல் ஒன்றிய பகுதியாக இருப்பதால் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று ரோடு புதுப்பித்தல் பணி நடக்க முயற்சி எடுக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை