உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பறக்கும் படைக்கு பயந்து பஸ்களில் பர்சேஸிங் செல்லும் வியாபாரிகள்

பறக்கும் படைக்கு பயந்து பஸ்களில் பர்சேஸிங் செல்லும் வியாபாரிகள்

திண்டுக்கல் : தேர்தலை முன்னிட்டு நடந்து வரும் வாகன சோதனையால் வியாபாரிகள் பொருட்கள் கொள்முதல் செய்ய தனி வாகனங்களில் செல்லாமல் பஸ்களில் சென்று வருகின்றனர்.லோக்சபா தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. பணப்பட்டுவாடாவை தவிர்ப்பதற்காக தேர்தல் பறக்கும் படை, நிலைக்கண்காணிப்புக்குழு என பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. டூவீலர், கார், வேன், லாரி உள்ளிட்ட தனியார் வாகனங்கள் பகல் , இரவு நேரங்களிலும் சோதனை செய்யப்படுகின்றன. திண்டுக்கல் மட்டுமின்றி தென்மாவட்டங்களை சேர்ந்த பலர், வெளிமாவட்டங்களில் ஜவுளி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்கின்றனர். வணிகர்கள் பெரும்பாலும் வங்கி பணவர்த்தனை செய்வது கிடையாது. இதற்காக சொந்தமான ,வாடகை சரக்கு வாகனங்கள், கார்களில் சென்று பொருட்களை கொள்முதல் செய்வதும், பரிவர்த்தனை மேற்கொள்வதும் வழக்கமான ஒன்று.ரூ.50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு செல்ல உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனால் வியாபாரிகளிடம் பணம், ஜவுளி போன்றவைகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இது வியாபாரிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் கட்சிக்காரர்களை கண்துடைப்பாக விட்டுவிடும் குற்றச்சாட்டையும் வியாபாரிகள் முன்வைக்கின்றனர்.இதனிடையே இதிலிருந்து தப்பிக்க வியாபாரிகள் பஸ்களில் சென்று கொள்முதல் செய்துவிட்டு, தனியார் லாரிகளில் ரசீது கொடுத்து திரும்பி விடுகின்றனர்.வியாபாரிகள் கூறியதாவது: கடைகளில் வியாபாரம் முடிந்ததும் பணத்தை எடுத்து கொண்டு பொருட்கள் வாங்க செல்வோம். இதற்கு எந்த ஆவணமும் இருக்காது. யாரிடமாவது கடன் பெற்று சென்றால் அந்த பணத்திற்கு எந்த ஆவணம் இருக்கும். வியாபார பணத்தை வங்கியில் செலுத்தி மீண்டும் அதை எடுத்து சென்றால் மட்டுமே ஆவணம் கொண்டு செல்ல முடியும். பணத்தை பறிமுதல் செய்து கொண்டு ஏதேனும் ஆவணம் கொண்டு வந்தால் மட்டுமே மீண்டும் வழங்குகின்றனர். இதனால் தேவையற்ற குழப்பம், அலைச்சல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க தனி வாகனங்களில் செல்லாமல் தற்போது பஸ்களில் சென்று பொருட்களை கொள்முதல் செய்கிறோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ