என்.பஞ்சம்பட்டியில் கோயில் திருவிழாவிற்கு எதிராக போராட்டம் நடத்திய 500 பேர் கைது
சின்னாளபட்டி: திண்டுக்கல் மாவட்டம் என்.பஞ்சம்பட்டியில் காளியம்மன் கோயில் திருவிழாவிற்கு எதிராக காத்திருப்பு போராட்டம் நடத்திய ஒரு தரப்பை சேர்ந்த 500 பேர் நேற்று அதிகாலை தாங்களாகவே முன்வந்து போலீசில் கைதாயினர். பின் விடுவிடுக்கப்பட்ட அவர்கள் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர். என்.பஞ்சம்பட்டி மைதானத்தில் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி அன்னதானம் நடத்த ஒரு தரப்பினர் மதுரை உயர்நீதிமன்றம் கிளையில் அனுமதி பெற்றனர். கும்பாபிஷேக ஏற்பாடுகள் நடந்த நிலையில் கிராம மைதானத்தை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பினர் திரு இருதய ஆண்டவர் சர்ச் வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் துவக்கினர். தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை. நேற்று முன்தினம் 3வது நாளாக போராட்டம் நடந்த நிலையில் நேற்று அதிகாலை 2:30 மணிக்கு போராட்ட குழுவினர் சர்ச் வளாகத்திலிருந்து வெளியே வந்தனர். மைதானத்தில் இரும்பு தடுப்புகளுடன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் தங்களது எதிர்ப்பை வலியுறுத்தி தாங்களாவே முன்வந்து கைதாவதாக போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தனித்தனி வாகனங்களில் திண்டுக்கல் அழைத்து செல்லப்பட்டனர். 119 ஆண்கள் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட நிலையில் மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து வழக்கமான பூஜைகளுடன் கோயில் கும்பாபிஷேகம் நடந்து குறிப்பிட்ட மைதானத்தில் போலீஸ் பாதுகாப்புடன் அன்னதானமும் நடந்தது.