விபத்துக்கு வாய்ப்பு: ரோட்டோரங்களை ஆக்கிரமித்துள்ள செடிகள்... : நடவடிக்கை எடுக்கலாமே நெடுஞ்சாலை துறை
மாவட்டத்தில் ரோட்டோரம் வளரும் புதர் செடிகளை அகற்றுவதில் தாமதம் ஏற்படுவதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன.குறிப்பாக மலைப் பகுதிகளில் அதிக மழைப்பொழிவின் காரணமாக செடிகள் விரைவில் அடர்ந்து வளர்கின்றன. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலையில் விபத்துக்கள் ஏற்படுகின்றன. வனவிலங்குகள் நடமாட்டம் புதர் செடிகளால் தெரியாத நிலையில் மனித வனவிலங்கு மோதலுக்கு ஆளாகும் சூழல் உள்ளது.கனரக வாகனங்கள் , பொது போக்குவரத்து பஸ் உள்ளிட்டவை அடர்ந்துள்ள செடிகளால் வாகனங்களில் கீறல்,கண்ணாடிகள் சேதமடைகின்றன. நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்களை கொண்டு அவ்வப்போது செடிகளை வேரோடு அகற்றாமல் கிளைகளை அகற்றுவதால் இவை விரைவில் துளிர் விடுகின்றன. சில மாதங்களில் துரிதமாக வளரும் சூழலில் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். பொதுவாக நெடுஞ்சாலைத்துறை ரோட்டோரங்களில் வேரோடு செடிகள் அகற்றப்படாத நிலையில் ஊர் பெயர் பலகைகள் மறைவு, வளைவுகள் உள்ளிட்ட ரோடு சிக்னல்கள் தெரியாத நிலை ஏற்படுகிறது. நெடுஞ்சாலைத்துறை புதர்செடிகளை வேரோடு இயந்திரங்கள் கொண்டு அகற்றும் பட்சத்தில் இவை எளிதில் வளராத சூழல் ஏற்பட்டு ரோடுகள் பளிச்சிடும்.இதன் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.