தொடர் மழை, பனியால் மலைப்பகுதிகளில் செல்லும் அரசு பஸ் டிரைவர்களுக்கு அறிவுரை
திண்டுக்கல்: தொடர்மழை,பனிப்பொழிவுகளால் சிறுமலை,கொடைக்கானல் மலைப்பாதைகளில் அரசு பஸ்களை இயக்கும் டிரைவர்கள் கவனமாகவும்,விழிப்போடும் இருக்க வேண்டும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல்,சிறுமலை பகுதிகளுக்கு செல்லும் மலைரோடுகள் குறுகிய வளைவுகளை கொண்ட ரோடுகளாக உள்ளன. இவைகளில் அனுபவம் மிகுந்த டிரைவர்களே கார்,பஸ்களை இயக்க முடியும். திண்டுக்கல் மண்டல போக்குவரத்து கழகத்திலிருந்து ஏராளாமான பஸ்கள் தினமும் சிறுமலை,கொடைக்கானலுக்கு பயணிகளை ஏற்றி செல்கிறது. தற்போது மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருகிறது. இதோடு பனிப்பொழிவும் உள்ளதால் முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு இருள் சூழ்ந்து உள்ளது. நேற்று கொடைக்கானல்,தாண்டிக்குடி வழித்தடங்களில் சென்ற அரசு பஸ்கள் பனிப்பொழிவால் தொடர்ந்து பயணிக்க முடியாமல் ஒவ்வொரு பகுதிகளிலும் நின்று நின்று சென்றன . இந்த நேரத்தில் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் தடுக்க மலைப்பாதைகளில் அரசு பஸ்சை இயக்கும் டிரைவர்கள் கவனமாகவும்,விழிப்புடனும் இருக்க வேண்டும். அதிக பனிப்பொழிவுகள் உள்ள இடத்தில் பஸ்சை நிறுத்தி பனி கலைந்த பின் பயணிப்பதற்கான சூழல் வந்த உடன் மீண்டும் பயணத்தை தொடங்க வேண்டும். இதோடு வளைவு பகுதிகளில் மெதுவாக செல்லவும் திண்டுக்கல் மண்டல போக்குவரத்து கழக அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.