திண்டுக்கல்
திண்டுக்கல் பழைய கரூர் ரோட்டிலுள்ள ஜி.டி.என்.கல்லுாரியின் 55வது பட்டமளிப்பு விழா பொன்னம்பல அடிகளாரால் துவக்கி வைக்க 60வது விளையாட்டு விழாவோடு ஆண்டு விழாவையும் இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடபட்டது. இதன் இணைப்பாக கலைகளை சிறப்பாக்கும் கல்சுரல் டே' என்ற விழாவும் இடம்பெற ஒட்டுமொத்த கல்லுாரி நிகழ்ச்சியும் களைகட்டின. விழவில் சின்னத்திரை கலைஞர்களை அழைத்திருந்தாலும் ஜி.டி.என்.கல்லுாரி மாணவர்களே கலை வடிவ அவதாரம் எடுத்ததுதான் ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் பிரமிக்க செய்தது. நுண்கலை மன்ற பயிற்சியாளாரான மாணவர் துரை சந்தோஷ் தலைமையிலான கிராமியம், மேற்கத்தியம், பரதநாட்டியம், ஓவியம், கட்டுரை, பேச்சு, மவுன நாடகம், இன்ஸ்ட்ரூமென்டல்ஸ் பிளேஸ்' போன்ற நிகழ்ச்சிகளை மின் விளக்கால் வண்ணம் தீட்டியபோது மேடையில் வானவில் களமிறங்கியது போன்ற பிரமிப்பை பார்வையாளர்களிடம் கொடுத்தது. அர்ச்சனை பூக்களாய் வாழ்த்துகிறோம்
ரத்தினம், தாளாளர், ஜி.டி.என். கலைகல்லுாரி: அழியாத செல்வங்களான கல்வியும், கலையும் தழைத்தோங்க செய்வதில் எமது கல்லுாரியின் பங்கு மகத்தானது. நுண்கலையில் மாநில அளவில் பல சாதனைகளை படைத்து வரும் மாணவர்களின் திறமைக்கு இந்த கல்லுாரியின் வாயிலாக எதிர்கால கலை உலகம் கம்பளம் விரித்து காத்து கிடக்கிறது என்பது மட்டும் தெளிவாகிறது. மாநில அளவில் மட்டுமல்லாது இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கும் அரங்கத்தில் கூட மாணவர்களை பங்கேற்க செய்வதில் ஆசிரியர்கள் ஒத்துழைப்பில் அரங்கேற்றுகிறோம். கலைதேவியின் அருள் மாணவர்களுக்கு முழுவதாய் கிடைக்க அர்ச்சனை பூக்களாய் மாறி வாழ்த்தி வருகிறோம். ஆசிரியர்களே வணங்கினோம்
பாலகுருசாமி, கல்லுாரி முதல்வர்: கேரளத்தின் கதகளி, ஆந்திராவின் காந்தாரக்கலை ஆட்டம், பரதம், மவுன நாடகம், மிமிக்ரி, அம்மன் அவதாரம், கருப்ப சுவாமியின் தத்ரூபமான குதிரை அவதார வேடம், சுவாமி வேடத்தில் தீப்பந்தம் ஏந்தி வந்த மாணவர்களை கண்டதும் பக்தி பரவசத்தில் இருக்கையில் இருந்துஎழுந்து, ஆசிரியர்களே மாணவர்களை கைகூப்பி வணங்கினோம் என்றால் அதுதான் கலைக்கு கிடைக்கும் மரியாதையாகும். அந்த நிகழ்ச்சிகளில் மாணவிகள் பலர் அம்மன் அருள் வந்து சுவாமியாடியபோது விஞ்ஞானத்தை மிஞ்சிய அஞ்ஞானமாகவே பார்வையாளர்கள் உணர்ந்தனர். மாணவர்களின் இந்த கலைத்திறமையை வெளியுலகிற்கு கொண்டு செல்ல பொருள், பயிற்சி ரீதியாக எம்கல்லுாரி முயற்சிகளை முன்னெடுக்கும் என்பதில் பெருமையடைகிறோம். கம்பளம் விரித்து காத்திருக்கிறோம்
மாசிலாதேவி, உதவி பேராசிரியர், தமிழ்துறை: விழாவானது பெயரளவில் மட்டும் இடம் பெயராமல் மாணவர்களின் உணர்வோடு கலக்க செய்ததில் சிறிய பங்கு ஆசிரியர்களான எங்களுக்கும் உண்டு என்பதை அறியும்போது பெருமையாக உள்ளது. தமிழ் பாரம்பரிய கலைகளை மீட்டெடுப்பதை முயற்சியாக கொண்டு சில்லாட்டம், ஒயிலாட்டம், காவடி, கரகம், மான்கொம்பு ஆட்டம் என மாணவர்களின் எண்ணத்திற்கு ஏற்ப மாணவர்கள் விரும்பும் கலையை ஊக்குவிக்க கம்பளம்விரித்து காத்திருக்கிறோம். அதன் பிரதிபலிப்பை இந்த நுண்கலை நிகழ்ச்சி அரங்கேற்றம் மூலம் வெளிக்கொணர செய்து திறமைகளை கலைசாதனை புத்தகத்தில் பதிவிடுகின்றனர். கண்ணிமையால் கவ்விய கரகாட்டம்
சன்மதி, கல்லுாரி மாணவி: இந்த நுண்கலை சிறப்பு நிகழ்ச்சியில் கரகம் எடுத்து ஆடினேன். இதற்காக ஒன்றரை ஆண்டாக பயிற்சி மேற்கொண்டு இக்கலையின் ஆகப்பெரும் சாதனையான கண்ணிமையால் கரகத்தை சுமந்தபடி குண்டூசியை லவகமாக எடுத்ததை ஒட்டுமொத்த அரங்கமே வியப்போடு பார்த்தது. கல்வியையும், கலையையும் இருகண்களாக கொண்டு செயல்படும் இக் கல்லுாரியில் பயில்வது பெருமையாக உள்ளது. ஆசிரியர்களின் ஊக்கமானது இந்த கலையின் அடுத்த கட்டத்தை நோக்கிய சாதனை பயணத்திற்கு என்னை கொண்டு செல்ல துாண்டுகிறது. சாதனையின் தடைக்கல்லை தகர்த்தது
கிருபாகரன், கல்லுாரி மாணவர்: மிமிக்ரி பாட்டு, கருப்பசுவாமி ஆட்டம் ஆடி கல்லுாரியின் நுண்கலை விழா நிகழ்ச்சியில் பங்கேற்றது பெருமையாக உள்ளது. சாதனையின் தடைக்கல்லான மேடைகூச்சத்தை முற்றிலும் ஒழிப்பதில் எமது கல்லுாரியின் பங்கு மகத்தானதாகும். இதன் தாக்கமானது இந்திய சினிமாவில் சாதித்து பெயரெடுக்க வேண்டும் என்ற லட்சியத்தை எங்களுக்குள் கூட்டியுள்ளது. இந்த கலைக்கான அங்கிகாரமாய் பரிசுகளோடு, சான்றிதழும் கொடுத்து வாழ்வின் சாதனை பயணத்திற்கான முகவரியையும் கொடுத்துள்ளதை பெருமையாக கருதுகிறேன்.