| ADDED : மார் 08, 2024 09:28 PM
பழநி:திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவில் அடிவாரம் கிரி வீதியில், உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வாகன போக்குவரத்துக்கும் தடை செய்யப்பட்டதால் வெறிச்சோடி காணப்பட்டது.எனினும், பக்தர்கள் நிம்மதி அடைந்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் இலவச பஸ் சேவையும் துவங்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் நெருக்கடியின்றி கோவிலுக்கு சென்று வந்தனர்.பழனி அடிவாரம் கிரிவீதியில் ஆக்கிரமிப்புகளை தடுக்க, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை பல வழிகாட்டுதல்களை வழங்கியது.அதன்படி, கிரி வீதியை சென்றடையும் கொடைக்கானல் பைபாஸ் இணைப்பு சாலை, அய்யம்புள்ளி ரோடு, சன்னிதி வீதி, இட்டேரி ரோடு, பூங்கா ரோடு, கிழக்கு கிரி வீதி இலவச சுற்றுலா வாகன நிறுத்த இணைப்பு சாலைகள், கோசாலை சுற்றுலா வாகன நிறுத்த இணைப்பு சாலைகள் அடைக்கப்பட்டன.அந்த பகுதியில் வாகன போக்குவரத்துக்கும் தடை ஏற்படுத்தி, பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில், இலவச பஸ் சேவை துவங்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பால் ஏற்பட்ட நெரிசலின்றி, வீதிகள் வெறிச்சோடி இருப்பதால் பக்தர்களும் சிரமம் இன்றி கோவிலுக்கு சென்று வருகின்றனர்.