| ADDED : நவ 17, 2025 01:53 AM
வடமதுரை: ''பீஹாரில் நிதிஷ்குமாரை எப்படி முதல்வராக்கி பிரதமர் மோடி அழகு பார்க்கிறாரோ அதே போல தமிழகத்தில் பா.ஜ., கூட்டணி கட்சியினர் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமியை முதல்வராக்குவார்கள்,'' என திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் அ.தி.மு.க., சார்பில் நடந்த இலவச மருத்துவ முகாமில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நம்பிக்கை தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: பீஹார் சட்டசபை தேர்தலின் போது காங்., மூத்த தலைவர் ராகுல் அரியானா மாநிலத்தில் ஓட்டு திருட்டு குறித்து தவறான பிரசாரத்தை கொண்டு சென்றார். அதையே தமிழக முதல்வர் ஸ்டாலினும் செய்தார். ஒரு பொய்யை மீண்டும், மீண்டும் சொன்னால் உண்மையாகி விடும் என்ற கோயோபல்ஸ் பிரசார பாணியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து உண்மைக்கு மாறான பிரசாரத்தை அவர்கள் செய்தனர். ஆனால் அதை பீஹார் மக்கள் நிராகரித்து தீர்ப்பு அளித்துள்ளனர். வெளியூர் சென்ற, இறந்து போன, முறைகேடாக சேர்க்கப்பட்டுள்ள, ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இடம் பெற்ற வாக்காளர்களை நீக்குவது தான் சிறப்புதீவிர திருத்தத்தின் முக்கிய பணி. இவ்விஷயத்தில் தி.மு.க., கூட்டணியில் இருக்கும் ம.தி.மு.க., கம்யூ.,கள் போராட்டம் நடத்துகின்றனர். இதில் என்ன தவறு கண்டனர் என தெரியவில்லை. டிச., 4 வரை சிறப்பு தீவிர திருத்த பணி நடந்த பின்னர் 3 மாதங்களில் விடுப்பட்டவர்கள் முறையான ஏதாவது ஒரு ஆவணம் தந்து சேர்க்கும் வாய்ப்பு தரப்படுகிறது. அப்போது அரசியல் கட்சியினர் கவனம் செலுத்தி விடுபட்டவர்களை சேர்க்க முடியும். பிரதமர் மோடியுடன் கூட்டணியில் இருக்கும் வரை அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி முதல்வராவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. பீஹாரில் எப்படி நிதிஷ்குமாரை முதல்வராக்கி பிரதமர் மோடி அழகு பார்க்கின்றாரோ, அதே போல தமிழகத்திலும் பா.ஜ., கூட்டணியினர் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமியை முதல்வராக வெற்றி பெற வைப்பர். அதற்கு அ.தி.மு.க.,வினரும் கடுமையாக உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.