உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல்லில் குப்பைத்தொட்டி ஊழல்: மாஜி கமிஷனர் உட்பட 6 பேர் மீது வழக்கு

திண்டுக்கல்லில் குப்பைத்தொட்டி ஊழல்: மாஜி கமிஷனர் உட்பட 6 பேர் மீது வழக்கு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியில் குப்பைத்தொட்டிகள், வரிவசூல் உள்ளிட்ட பல்வேறு இனங்களின் அடிப்படையில் ரூ.17 கோடி முறைகேடு தொடர்பாக முன்னாள் கமிஷனர் உட்பட 6 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திண்டுக்கல்லில் மாநகராட்சியில் குப்பைத்தொட்டி வாங்கியதில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அலுவலகத்துக்கு புகார்கள் சென்றன. நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு இயக்குனர் அலுவலகம் உத்தரவிட்டது. அதன்படி லஞ்ச ஒழிப்பு துறை உதவி ஆணையர் தலைமையில் 2015 முதல் 2019 வரை உள்ள கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டன. வரி வருவாய், முதலீடு, குடிநீர் வழங்கல், பாதாள சாக்கடை நிதி, துவக்க கல்வி நிதிகளில் ரூ.17 கோடியே 73 லட்சத்து 16 ஆயிரத்து 820 முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதைய மாநகராட்சி கமிஷனர் மனோகர், துணை வருவாய் அலுவலர் சாரங்க சரவணன், வருவாய் ஆய்வாளர் ராமச்சந்திரன் (இறந்து விட்டார்) ஆகியோர் 1 முதல் 12 வரை உள்ள வார்டுகளில் சொத்துவரியை குறைவாக மதிப்பிட்டு ரூ.18 லட்சத்து 272 முறைகேடு செய்தது தெரியவந்தது. மேலும், சந்தை நிலவரப்படி ரூ.19 ஆயிரத்து 834 மதிப்பு கொண்ட ஒரு குப்பைத்தொட்டியை ரூ.37 ஆயிரத்து 750 என 137 குப்பைத்தொட்டிகளை ரூ.51 லட்சத்து 71 ஆயிரத்து 750க்கு வாங்கி முறைகேடு நடந்துள்ளது. தணிக்கையில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் மனோகர், சாரங்க சரவணன், அப்போதைய நிர்வாக பொறியாளர் கணேசன், துணை பொறியாளர்கள் மாரியப்பன், சுவாமிநாதன், தொட்டிகள் விற்ற சுசி இன்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் நடராஜன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., நாகராஜ், இன்ஸ்பெக்டர் பழனிசாமி வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் மனோகர், கணேசன் ஓய்வு பெற்று விட்டனர். சாரங்க சரவணன் திருநெல்வேலியிலும் மாரியப்பன் சென்னையிலும், சுவாமிநாதன் திண்டுக்கல்லிலும் பணியாற்றுகின்றனர். சாரங்க சரவணனுக்கு திண்டுக்கல்லுக்கு இடமாறுதல் உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. அவர் இங்கு இன்னும் பணியில் சேரவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை