வனவிலங்குகளால் வாழ்வாதாரம் பாதிப்பு: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குமுறல்
கொடைக்கானல்: வனவிலங்குகளால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கொடைக்கானலில் நடந்த விவசாயிகள் குறைதீர்க் கூட்டத்தில் விவசாயிகள் குமுறலை வெளிப்படுத்தினர். இதன் கூட்டம் தாசில்தார் பாபு தலைமையில் நடந்தது. தோட்டக்கலை உதவி இயக்குனர் சொர்ணலதா, மின் உதவி கோட்ட பொறியாளர் மேத்யூ, ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் ராஜேந்திரன்,மண்டல தாசில்தார் ஜெயராஜ் கலந்து கொண்டனர். விவசாயிகள் விவாதம்: சந்திரசேகர், பழம்புத்துார்: போலுார்,கூக்கால் கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன் செலுத்தியும் புதிய கடன் வழங்காமல் இழுத்தடிக்கின்றனர். தாசில்தார்: வங்கி அதிகாரியிடம் தெரிவித்து கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும். தனுஷ்கோடி,வடகவுஞ்சி: காட்டுப்பன்றி, காட்டு மாடுகளால் விவசாயம் அடியோடு பாதித்துள்ளது. வனத்துறையினர் கண்டு கொள்வதில்லை. சுபாஷ், வனவர்: காட்டு மாடுகளை கட்டுப்படுத்த வருவாய் நிலங்களில் மேய்ச்சல் புல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. சந்திரசேகர்,பழம்புத்துார் : மேல்மலை கிராமங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் அன்றாட அலுவல் பாதிக்கின்றன. உதவி கோட்ட பொறி யாளர்: மலை அடர் பகுதிகளில் மின் வழித்தடங்கள் செல்கின்றன. இவற்றை உயர்கோபுரம், கேபிள் மூலம் மின்சாரத்தை கொண்டு செல்வதற்கு திட்டம் உயர் அதிகாரியிடம் அனுப்பப்பட்டுள்ளது. இடையூறுகளை சரி செய்து வருகிறோம். விவேகானந்தன், மன்னவனுார் : ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட இடங்களில் காட்டுப்பன்றிகளை சுட்டுத்தள்ள நடவடிக்கை உள்ள நிலையில் இங்கு எப்போது நடைமுறைக்கு வரும். தாசில்தார்: தொடர் பாதிப்பு குறித்து வனத்துறை உயராதிகாரியிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும். கருப்பையா, பெருமாள் மலை: பேரிக்காய், பிளம்ஸ் உள்ளிட்ட பழப் பயிர்கள் அழிவுக்கு சென்று உள்ளது. தோட்டக்கலைத்துறை நடவடிக்கை தேவை. தாசில்தார்: தோட்டக்கலைத் துறையினர் மூலம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.