| ADDED : நவ 18, 2025 04:26 AM
வடமதுரை: திண்டுக்கல் மாவட்டத்தில் ஏராளமான இடங்களில் தெருவிளக்குகள் 24 மணி நேரமும் எரிவதால் மின்சக்தி வீணாவதுடன், விரைவாக பல்புகள் பழுதாகி அரசிற்கு நஷ்டம் ஏற்படுகிறது. மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளால் அமைக்கப்பட்டிருக்கும் தெருவிளக்குகள் ஏராளமான எண்ணிக்கையில் அணைப்பதற்கு யாருமின்றி 24 மணி நேரமும் எரிகின்றன. நடுத்தரமான ஒரு ஊராட்சியில் குறைந்தது 200 தெருவிளக்குகள் இருக்கும். 50 இடங்களிலாவது இவற்றை 'ஆன்; ஆப்' செய்வதற்குரிய 'சுவிட்ச்'கள் அமைக்கப்பட்டிக்கும். ஆனால் சூரிய உதயம் ஏற்பட்டதும் 'ஆப்' செய்யவோ, சூரியன் மறைந்து இரவு துவங்கும் போது 'ஆன்' செய்யவோ யாரும் இருப்பதில்லை. அதோடு, பல இடங்களில் தெருவிளக்குகள் அமைத்து அதற்குரிய தனி மின்ஒயர்களை இணைத்து ஒரு 'சுவிட்ச்' பெட்டி வைக்க வேண்டும் என்றால் மின்வாரியத்திற்கு ஊராட்சி சார்பில் பணம் செலுத்த வேண்டும். இதை செய்யாமல் பல இடங்களிலும் மின்கம்பங்களில் தெருவிளக்கு பல்புகளை தொங்கவிட்டு நேரடியாக மின்பாதையில் இணைத்து விடுகின்றனர். மின்நிலையத்தில் சப்ளை நிறுத்தும்போது தவிர மற்ற எல்லா நேரங்களிலும் எரிந்து கொண்டே இருக்கும். இதனால் அதன் ஆயுள் காலமும் விரைவாக முடிந்து, ஊராட்சிக்கு இழப்பு ஏற்படுகிறது. நகர்புற உள்ளாட்சிகளின் ஊழியர்கள் எண்ணிக்கையை ஒப்பிடுகையில் கிராம ஊராட்சிகளில் மிகவும் குறைவு என்பதால் தெருவிளக்குகளை 'ஆன்; ஆப்' செய்வதற்கு எந்த பணியாளரும் வருவதில்லை. சில இடங்களில் வீடு அருகில் 'சுவிட்ச்' பெட்டி இருந்தாலும் அதை முறையாக பயன்படுத்தாதவர்களும் இருக்கவே செய்கின்றனர். ஒருபக்கம் மக்களின் தேவையை நிறைவேற்ற உள்ளாட்சி அமைப்பினர் கடமையை செய்ய, அதை முறையாக பயன்படுத்தும் வழிகாட்டுதல் இல்லாமல் இவ்விஷயத்தில் மின்சாரமும், மின் உபகரணங்களின் செலவும் வீணாடிக்கிறது. இதை தடுக்க விழிப்புணர்வு இயக்கத்தை அரசு நடத்த வேண்டும். - * -விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் பல இடங்களில் தெரு விளக்குகளின் 'சுவிட்ச்' பெட்டி இருக்கும் மின் கம்பத்திற்கு அடியில் புதர் மண்டி இருக்கிறது. பல இடங்களில் நல்ல இடத்தில் இருந்தாலும் மின்சக்தி வீணாவதை தடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு, அக்கறை மக்களிடம் இல்லை என்பதையும் மறுக்க முடியாது. சேமிக்கப்படும் மின்சாரம் உற்பத்திக்கு சமமானது. மின்சக்தி வீணாடிப்பதை தவிர்க்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு தெருவிளக்கிலும் சூரிய வெளிச்சம் குறைந்தும் தானாக எரியவும், சூரியன் உதயமான பின் தானாகவே அதனையும் வகையில் உபகரணங்களை பொருத்தலாம். - ரத்தினவேல், நிர்வாக தலைவர், ஸ்ரீ பேசும் பாலமுருகன் மடாலய அறக்கட்டளை, தென்னம்பட்டி ஆண்டியப்பட்டி.