| ADDED : மார் 13, 2024 12:11 AM
ரேஷன் கடைகளில் இலவச அரிசி , குறைந்த விலையில் பருப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல் பொங்கல் நேரங்களில்தமிழக அரசின் பொங்கல் பொருட்கள், உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த நேரங்களில் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவரும் ரேஷன் கடைக்கு செல்கின்றனர். ஆனால் 80 சதவீத மக்கள் எளிதாக கைரேகை பதிந்து பொருட்களை வாங்கும் நிலையில் 20 சதவீத மக்கள் குறிப்பாக முதியோர், தங்களது கை ரேகை பதிவு ஆகாததால் பொருட்களை வாங்க முடியாமல் வீட்டுக்கு திரும்பி வருவதும், மீண்டும் கடைக்கு செல்வதுமாக அவதிக்கு ஆளாகின்றனர்.இதற்குக் காரணம் 2016 ல் வழங்கப்பட்ட பாயின்ட் ஆப் சேல்ஸ் (பி ஓ எஸ்.,) மிஷின்கள் தற்போது தேய்மானம் அடைந்து பழுதடைந்து இருப்பது ஒரு காரணம் என்கின்றனர். இதேபோல் வயதானவர்களின் கைரேகைகளும் தேய்ந்து, சுருங்கி ரேகை பதிவு ஆகாமல் உள்ளது. இதனால் 20 சதவீத ரேஷன் கார்டு தாரர்கள் குறிப்பாக வயதானவர்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். கைரேகை பதிவு ஆகாதவர்களுக்கு கார்டு நம்பரை மட்டும் பதிவேற்றம் செய்து கொண்டு பொருட்களை வழங்க காலதாமதம் செய்வதாகவும், அலைக்கழிக்கப் படுவதாகும் குமுறுகின்றனர் கார்டுதாரர்கள் .இதற்கெல்லாம் தீர்வு காண 2016 ல் வழங்கப்பட்ட பாயின்ட் ஆப் சேல்ஸ் மிஷின்களை மாற்றிவிட்டு தற்போதைய காலத்துக்கு ஏற்றவாறு நவீன மிஷின்களை ரேஷன் கடை வாரியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.