ஊரக வளர்ச்சி அதிகாரியை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
திண்டுக்கல்: ''துாய்மைப்பணியாளர்களுக்கு வாரத்தில் 6 நாள் வேலை என்ற நிலையில் சுழற்சி முறையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்படும் என உத்தரவிட்ட ஊரக வளர்ச்சி,ஊரக இயக்கங்கள் துறை கூடுதல் இயக்குநர் ஆனந்தராஜை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் ''என தமிழக ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: துாய்மைப்பணியாளர்களுக்கு வாரத்தில் 6 நாட்கள் வேலை என்ற அடிப்படையில் தான் தமிழக அரசு பணியமர்த்தியது. இந்த சூழ்நிலையில் சென்னை ஊரக வளர்ச்சி , ஊரக இயக்கங்கள் துறை கூடுதல் இயக்குநர் ஆனந்தராஜ் ஆக., 21ல் காணொலி காட்சி மூலம் நடந்த கூட்டத்தில் துாய்மைப்பணியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் சுழற்சி முறையில் விடுமுறை அளிக்கப்படும் என உத்தரவிட்டுள்ளார். இது பணியாளர்களை போராட துாண்டும் விதமாகவும், தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாகவும் உள்ளது. இந்த உத்தரவை அரசு ரத்து செய்வதோடு கூடுதல் இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி நாளை தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். 6 நாள் வேலை, ஒருநாள் விடுப்பு என்பதை அமல்படுத்த வேண்டும் என்றார்.