எண்ணும் எழுத்தும் திட்டத்தில் தரநிலை அறிக்கை; போட்டோவுடன் 4 பக்கங்களில் தயாராகும் விபரக்குறிப்பு
சின்னாளபட்டி; அரசு பள்ளி தொடக்கநிலை வகுப்பு மாணவர்களுக்கு 4 பக்கங்கள் கொண்ட போட்டோவுடன் கூடிய தரநிலை அறிக்கை வழங்க தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் தொடக்கநிலை (1 முதல் 5) வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் மூலம் தரநிலை அறிக்கை தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப அனைத்து மாணவர்களுக்கும் 4 பக்கங்களில் தயாராகும் விபரக்குறிப்பு தொடர்பான விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை தொடக்க கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி முதல் பக்கத்தில் பாஸ்போர்ட் அளவு போட்டோவுடன் அடிப்படை விபரங்களும், 2வது பக்கத்தில் மொழி, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாட திறன் அடிப்படையில் ஏ முதல் சி வரையான தரநிலை குறிப்பிட வேண்டும். அடுத்தடுத்த பக்கங்களில் கல்வி, இணை செயல்பாடுகள் (விளையாட்டு பங்கேற்பு, குழுப்பணி, படைப்பாற்றல் உள்பட) வருகை நாட்கள், மாணவர் சார்ந்த ஆசிரியர் குறிப்பு, பெற்றோர் கருத்து போன்ற விபரங்கள் இடம் பெற உள்ளது.