| ADDED : பிப் 25, 2024 05:58 AM
திண்டுக்கல் : ''திண்டுக்கல் ,பழநி ரயில்வே ஸ்டேஷன்கள் புனரமைப்பு பணிகளை நாளை (பிப்.26) காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திரமோடி துவக்கி வைப்பதாக,'' மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத்ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.திண்டுக்கல், பழநி ரயில்வே ஸ்டேஷன்களில் நடக்கும் இதற்கான விழா ஏற்பாடுகளை நேற்று ஆய்வு செய்த அவர், ஸ்டேஷன் மேலாளர் கோவிந்தராஜ், கோட்ட வர்த்தக ஆய்வாளர் சத்தியமூர்த்தியிடம் ஆலோசனை நடத்தினார். இதன்பின் அவர் கூறியதாவது: இந்தியா முழுவதுமாக 554 ரயில்வே ஸ்டேஷன்களின் காத்திருப்பு அறை, டிஜிட்டல் மின்பலகைகள், பார்க்கிங், நடைமேடை பாலங்கள், சுரங்க பாதை கூடுதலாக ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவை பிரதமர் மோடி காணொலியில் நாளை துவக்கி வைக்கிறார். மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட திண்டுக்கல், பழநி உட்பட 15 ரயில்வே ஸ்டேஷன்களில் ரூ.120 கோடியில் புனரமைப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் திண்டுக்கல் ஸ்டேஷனுக்கு மட்டும் ரூ.18 கோடியில் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது என்றார்.