உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குடகனாற்றை கடக்க இல்லை மேம்பாலம்; 50 ஆண்டாக போராடும் மக்கள்

குடகனாற்றை கடக்க இல்லை மேம்பாலம்; 50 ஆண்டாக போராடும் மக்கள்

தாடிக்கொம்பு : தாடிக்கொம்பு பேரூராட்சி ஆத்துப்பட்டிக்கு குடகனாற்றை கடந்து செல்ல வேண்டி உள்ளதால் பாலம் இல்லாத நிலையில் பாலம் வசதி கேட்டு இப்பகுதி மக்கள் 50 ஆண்டுகளாக போராடுகின்றனர். கடந்த காலங்களில் வெள்ளத்தில் இருவர் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், இனிமேலாவது பாலம் அமையுமா என்ற கேள்வியை எழுப்பி உள்ளனர்.தாடிக்கொம்பு பேரூராட்சி பகுதியில் தாடிக்கொம்பு வேடசந்துார் செல்லும் குடகனாற்று பகுதியில் அமைந்துள்ளது ஆத்துப்பட்டி. இந்த பகுதியை சேர்ந்தோர், பள்ளி, கல்லுாரி மாணவர்களும் வேடசந்துார், திண்டுக்கல் உள்ளிட்ட நகர் பகுதிகளுக்கு ஆற்றை கடந்துதான் சென்று வருகின்றனர். நீர் வரத்து உள்ள போது மக்கள் ஆற்றை கடக்க முடியாமல் தவிப்பதும் காலம் காலமாக தொடர்கிறது. ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நேரத்தில் ஆற்றை கடந்து ஊருக்குள் வர முயற்சித்த, நூற்பாலை தொழிலாளி தங்கப்பாண்டி 25, , விவசாயி கோபால் 40, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர் . வெள்ளம் பெருக்கெடுக்கும் மழை காலங்களில் ஆம்புலன்ஸ் வர முடியாமல் பாதிக்கப்பட்டோரும் உண்டு.இந்த பகுதி மக்களுக்கான வழித்தடத்தில் குடகனாறு ஆற்றுப்பகுதியில் மேம்பாலம் வசதி செய்யவும், ரோடு வசதி ஏற்படுத்தவும் இப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரி வருகின்றனர்.50 ஆண்டாக தொடரும் இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேவை நிரந்தர பாலம்

டி.சுப்பையா, ஊர் நாட்டாமை, ஆத்துப்பட்டி : 50 ஆண்டு காலமாக ஆத்துப்பட்டி பகுதி மக்கள் வெள்ளப்பெருக்கு நேரங்களில் குடகனாற்றை கடக்க முடியாமல் தவிக்கின்றனர். ஆற்றைக் கடந்து கடைகளுக்கு கூட செல்ல முடியாது மழைக்காலங்களில் தேவையான பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்த காலமும் உண்டு. இப்போது காலம் மாறிவிட்டது .அனைத்து வீடுகளிலும் வாகனங்கள் இருந்தாலும் குடகனாற்றில் தண்ணீர் வந்தால் கடந்து செல்ல முடியவில்லை. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டித்தரக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அதன் பிறகு தான் தற்கோலிக குழாய் பாலம் அமைத்தனர். சில நாட்கள் முன்பு கூட கூடுதலான தண்ணீர் வந்தபோது குழாய் பாலத்திற்கு மேலே தண்ணீர் சென்றது.

போராடியும் நோ யூஸ்

எம்.சக்திவேல், விறகு வியாபாரி, ஆத்துப்பட்டி: வெள்ளம் வரும்போது ஆற்றைக் கடந்து வெளியே செல்வதுதான் குதிரை கொம்பாக உள்ளது. இவ்வளவு காலமும் ஆற்றில் பாலம் கட்டித் தர தொடர்ந்து போராடி வருகிறோம். ஆனால் பாலம் இதுவரை கட்டவில்லை. இப்போதுதான் நிதி ஒதுக்கி இருப்பதாக சொல்கிறார்கள். அது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. பாலம் அமைக்கும் பணி நடந்தால் தான் நிச்சயம். கடந்த காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது இருவர் இறந்தது வேதனை அளிக்கிறது. பள்ளி, கல்லுாரி மாணவர்களும், வேலைக்குச் செல்லும் பொதுமக்களும் பாதிக்கின்றனர்.

விரைவில் பாலம்

டி.மகாலிங்கம், பேரூராட்சி இளநிலை உதவியாளர், தாடிக்கொம்பு பேரூராட்சி: இங்கு பாலம் அமைக்க கோரி இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை சார்பில் ரூ.7 கோடியே 34 லட்சம் திட்ட மதிப்பில் பாலம் அமைக்க மாவட்ட நிர்வாக அனுமதி கிடைத்துள்ளது. விரைவில் டெண்டர் விடப்பட்டு பணிகள் துவக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை