உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இவங்க தொல்லை தாங்கல: ஒப்பந்த பணிகளில் முன்னாள் பிரதிநிதிகள் தலையீடு

இவங்க தொல்லை தாங்கல: ஒப்பந்த பணிகளில் முன்னாள் பிரதிநிதிகள் தலையீடு

ரெட்டியார்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஊராட்சிகளின் பிரதிநிதிகளின் பதவிக்காலம் ஜன. 5ல் முடிந்தது. இருப்பினும் முன்னாள் பிரதிநிதிகளின் ஆதிக்கத்தால், நிர்வாகம், ஒப்பந்த ஒதுக்கீடு, தரமற்ற பணிகளால் ஊராட்சி செயலாளர்கள் சிக்கி தவிக்கின்றனர்.மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் 306 ஊராட்சிகள் உள்ளன. இவைகளில் பி.டி.ஓ.,க்கள், துணை பி.டி.ஓ.,க்கள் என நிர்வாக ரீதியிலான அதிகாரிகளின் கண்காணிப்பு பெயரளவில் மட்டுமே உள்ளது. இதனால் சில முன்னாள் ஊராட்சி தலைவர், துணை த்தலைவர், உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர் மட்டுமின்றி அவர்களது உறவினர்களின் ஆதிக்கமே இன்றும் தொடர்கிறது. பல்வேறு காரணங்களை கூறி ஊராட்சி நிர்வாக செயல்பாடுகளை கண்காணிக்க அலுவலர்களும் நேரடி வருகையை தவிர்க்கின்றனர்.வேலை உறுதி திட்ட பணிகள் தொடர்பாக சமீபத்தில் மாவட்டத்தில் பரவலாக பல்வேறு ஊராட்சிகளில் மத்திய தணிக்கை குழு நேரடி கள ஆய்வு மேற்கொண்டது. இதில் ஏராளமான முறைகேடுகள் பூதாகரமாக வெளிவரும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஊராட்சி செயலர்கள் அச்சத்தில் உள்ளனர்.ஆளுங்கட்சி நிர்வாகிகளால் மேற்கொள்ளப்பட்ட தரமற்ற பணிகள் சார்ந்த பிரச்னைகள் இத்துறையினருக்கு சிக்கலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.ஒன்றிய, ஊராட்சி அலுவலகங்களில் ஆவண பராமரிப்பு, கணினி அறை உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலும் மகளிர் ஊழியர்கள் பணியில் உள்ளனர். இருப்பினும் சம்பந்தப்பட்ட பகுதிகளில் கட்சி நிர்வாகிகள், ஒப்பந்ததாரர்கள் எந்த நேரமும் ஆக்கிரமித்து உள்ளனர். இதோடு முன்னாள் பிரதிநிதிகள், ஆளுங்கட்சியினரின் நிர்வாக தலையீடு மக்களிடையே அதிருப்தியையும், தரமற்ற ஒப்பந்த பணிகள் வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு சிக்கலையும் ஏற்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.இப்பிரச்னைகளுக்கு கடிவாளம் அமைக்கும் வகையில் கண்காணிப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம் முடுக்கி விட வேண்டும்.-

ஆதிக்கத்தால் அதிருப்தி

ஊராட்சி, ஒன்றிய நிர்வாகம் மட்டுமின்றி பேரூராட்சிகளிலும் உள்ளாட்சி பிரதிநிதிகளின் தலைமை பொறுப்பில் இருக்கும் நபர்களின் அறை, நிர்வாக அதிகாரிகளின் அறைகளில் கட்சி நிர்வாகிகள் ஆக்கிரமித்து அமர்ந்துள்ளனர். அதிகாரிகள், அரசு ஊழியர்கள் சிலரும் உடந்தையாக செயல்படுகின்றனர். ஊராட்சிகளில் பதவிக்காலம் முடிந்து பல மாதங்களாகியும் ஆளுங்கட்சி நிர்வாகிகள், முன்னாள் பிரதிநிதிகளின் வழிகாட்டுதல் படி செயல்பட்டு வருகின்றனர். சில ஆண்டுகளாக சாக்கடை கட்டுதல், தார் ரோடு, பேவர் பிளாக் ரோடு, அங்கன்வாடி கட்டடங்கள் போன்ற நலத்திட்ட பணிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வாரி வழங்கப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடுதல், பில் வழங்க மறுத்தால் மாற்றி விடுவோம் என மிரட்டும் செயல்களும் அரங்கேறி வருகிறது. தரமற்ற பணிகளால் மக்கள் மத்தியில் ஏற்படும் அதிருப்தி மட்டுமின்றி ஊராட்சி செயலர்கள் உள்ளிட்ட வளர்ச்சித் துறை அலுவலர்கள் தணிக்கை நடவடிக்கைகளில் சிக்கி தவிக்கும் அவலமும் நீடிக்கிறது. ராமச்சந்திரன் ,ஒன்றிய பா.ஜ., விவசாய அணி நிர்வாகி, ரெட்டியார்சத்திரம்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !