மாவட்டத்தில் வெவ்வேறு கொலை வழக்குகளில் மூவருக்கு ஆயுள்
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த வெவ்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய மூவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டது. எரியோடு மாரம்பாடி பகுதியில் 2019-ல் சொத்து பிரச்னையில் உறவினரான அந்தோணிசாமியை கொலை செய்த வழக்கில் செல்வகுமாரை 34 , எரியோடு போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு வழக்கறிஞர் மகேந்திரன் ஆஜராகினார். செல்வகுமாருக்கு முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி முத்துசாரதா ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதேபோல் திண்டுக்கல் சாலையூர் பகுதியில் 2020-ல் மது போதையில் ஏற்பட்ட பிரச்னையில் மணிகண்டனை கொலை செய்த வழக்கில் அஜித் குமாரை 25,தாலுகாபோலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் பட்டியல் வகுப்பினர் , பழங்குடியினர் சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு வழக்கறிஞர் ஜெயராஜ் வாதாடினார். அஜித் குமாருக்கு மாவட்ட பட்டியல் வகுப்பினர் பழங்குடியினர் சிறப்பு அமர்வு நீதிமன்ற நீதிபதி முரளிதரன் ஆயுள் தண்டனை , ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். செம்பட்டியை அடுத்த சித்தையன்கோட்டையை சேர்ந்த பால் வியாபாரி ரசூல்மைதீன் 49. இவரது மனைவி ஜெசினாபானு 30. 2020 ல் கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ரசூல்மைதீன் கத்தியால் மனைவியை குத்தி கொலை செய்தார். இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் ஜோதி வாதாடினார். ரசூல்மைதீனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சரண் தீர்ப்பளித்தார்.