உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  முறையாக நடக்காத விற்பனைக்குழு தேர்தல்: மார்க்சிஸ்ட் வெளிநடப்பு

 முறையாக நடக்காத விற்பனைக்குழு தேர்தல்: மார்க்சிஸ்ட் வெளிநடப்பு

திண்டுக்கல்: நகர் விற்பனைக்குழு தேர்தலை முறையாக நடத்தாததை கண்டித்து திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கவுன்சிலர்கள் மூவர் வெளிநடப்பு செய்தனர். திண்டுக்கல் மாநகராட்சி கவுன்சில் கூட்டம் மேயர் இளமதி (தி.மு.க.,) தலைமையில் நடந்தது. துணை மேயர் ராஜப்பா(தி.மு.க.,) கமிஷனர் செந்தில்முருகன் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் விவாதம் பாஸ்கரன் (அ.தி.மு.க.,): வார்டுக்கு போதுமான நிதி ஒதுக்கவில்லை. இதனால் பணிகளை செய்ய முடியவில்லை. மேயர் : நடவடிக்கை எடுக்கப்படும். உமாதேவி (அ.தி.மு.க.,): சிறப்பு வார்டுசபை கூட்டத்தை ஒப்புதல் கொடுத்த தேதியில் நடத்தாமல் இரண்டு நாளுக்கு முன்னதாகவே கவுன்சிலர் இல்லாமல் அதிகாரிகளால் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. கவுன்சிலரின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டுள்ளது. இதை கண்டிக்கிறேன். துணைமேயர்: இதுகுறித்து அதிகாரிகள் முறையாக பதில் கூறிவிட்டார்கள். பிறகு பேசிக்கொள்ளலாம். ஜோதிபாசு (மார்க்சிஸ்ட்): திண்டுக்கல் மாநகராட்சி நகர் விற்பனைக்குழு தேர்தல் முறையாக நடத்தவில்லை. விற்பனைக்குழு தலைவரான கமிஷனர் முறையான விளம்பர அறிவிப்பு செய்து தேர்தல் நடத்தி புதிய உறுப்பினர்களை தேர்தெடுக்காமல், பழைய கமிட்டியின் உறுப்பினர்களை அழைத்துபேசி அவருக்கு பிடித்த நபர்களை தேர்வு செய்து நியமித்திருக்கிறார். இது மாநகராட்சி விதிப்படி தவறானது. தன்னிச்சையாக செயல்பட்ட கமிஷனரை கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன்.இதை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியை மேலும் இரு கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்தனர். இளமதி : கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்வது தவறானது. கார்த்திக் (காங்.,): 3 மாதம் பிறகு கவுன்சிலர்கள் கூட்டம் நடக்கிறது. மைக் வேலை செய்யவில்லை. ஒவ்வொருவரும் கத்தி பேசவேண்டி உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் கூட்டரங்கை இப்படித்தான் பராமரிப்பு செய்வார்களா. இதை இந்த கூட்டம் கேள்வி கேட்காதா என்றார். உடனே அவரை சக கவுன்சிலர்கள் சமாதானம் செய்து அமர வைத்தனர். இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை