| ADDED : நவ 25, 2025 04:14 AM
வேடசந்துார்: விவசாய பயிர்களுக்கு தேவையான யூரியா கிடைக்காமல் விவசாயிகள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். வேடசந்துார் தாலுகா பகுதியில் பெய்த மழையை பயன்படுத்தி நெல், கம்பு, சோளம், நிலக்கடலை உள்ளிட்ட பயிர் வகைகளை பயிரிட்டு வருகின்றனர். பயிர்கள் ஓரளவு வளர்ந்துள்ள நிலையில் மேலும் நன்கு வளர , மகசூல் கூடுதலாக கிடைக்க வேண்டும் என்ற ஆவலில் பயிர்களுக்கு யூரியா வாங்கி இடுகின்றனர். விவசாயிகளின் ஆசை நிராசையாகும் வகையில் தற்போது யூரியா மட்டும் எந்த கூட்டுறவு சொசைட்டிகளிலும், தனியார் கடைகளிலும் கிடைக்கவில்லை . இதனால் கடை, கடையாக ஏறி இறங்கி சிரமப்படு கின்றனர். விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் எ.சவடமுத்து கூறுகையில்,'' சீசன் நேரங்களில் பயிர்களுக்கு யூரியா போட்டால்தான் பயிர்கள் நன்கு வளரும். நானும் யூரியா வாங்கி போடலாம் என எங்கு சென்றும் யூரியா கிடைக்கவில்லை. அருகிலுள்ள இராமநாதபுரம், நாகையகோட்டை, எரியோடு, அம்மாபட்டி என நான்கு வேளாண் கூட்டுறவு சங்கங்களிலும் சென்று கேட்டுப் பார்த்தேன். யூரியா மட்டும் இல்லை என்கின்றனர். இதனால் என்னை போன்ற பல விவசாயிகள் தினமும் வந்து செல்கின்றனர். கூட்டுறவு சொசைட்டிகளில் தேவையான யூரியா கிடைக்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்'' என்றார்.