| ADDED : ஜூலை 14, 2011 01:34 AM
ஈரோடு: ஈரோடு தெற்கு மாவட்ட தே.மு.தி.க., சார்பில், விஜயகாந்த் பிறந்த நாள், தே.மு.தி.க., ஏழாம் ஆண்டு துவக்க விழா குறித்த ஆலோசனைக் கூட்டம், ஈரோடு ஜனனி திருமண மண்டபத்தில் நடந்தது. எம்.எல்.ஏ., சந்திரகுமார் பேசுகையில், ''கட்சி ஆரம்பிக்கும் முன்பே, விஜயகாந்த் ரசிகர் மன்றமாக செயல்பட்டபோதே, நாம் இலவச நோட்புக், சேலை, வேட்டி வழங்கியுள்ளோம். அதிலேயே நாம் நின்று விடக்கூடாது. குறைந்தது மூன்று தையல் இயந்திரங்கள், மூன்று மூன்று சக்கர சைக்கிள்கள் நலத்திட்ட உதவியாக வழங்கப்பட வேண்டும். இது கட்சி தலைமை உத்தரவு,'' என்றார். மாவட்ட அவைத்தலைவர் பொன்.சேர்மன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சிவக்குமார் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர்கள் கோபால், தங்கமுத்து, தனசண்முகமணி, ஏசையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் நமச்சிவாயம் நன்றி கூறினார். கூட்டத்தில், ஒவ்வொரு ஒன்றிய செயலாளர்கள் பேச ஆரம்பிக்கும் முன், கட்சி தலைவர் விஜயகாந்தை, 'நான் வணங்கும் தெய்வம்' என்று குறிப்பிட்டு பேசினர்.