UPDATED : டிச 20, 2011 08:17 AM | ADDED : டிச 19, 2011 03:51 AM
அந்தியூர்: அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை அருகே உள்ள கரும்பு தோட்டத்தில், நேற்று முன்தினம் இரவு புகுந்த ஆண் யானை பயிர்களை நாசப்படுத்தியது. அந்தியூர் வனத்துறை ஊழியர்கள் 3 மணி நேர போராட்டத்துக்கு பின், பட்டாசு வெடித்து யானையை வெளியேற்றினர். அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையருகே உள்ள செக்போஸ்ட் சுற்று வட்டாரத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக, அப்பகுதியில் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு, நெல் ஆகிய பயிர்களை சாப்பிட்டும், மிதித்தும் யானைகள் நாசப்படுத்தி வருகின்றன.நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு, பழனிச்சாமி (45), சின்ராஜ் (39) ஆகியோருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் ஆண் யானை ஒன்று புகுந்தது. அக்கம் பக்கம் தோட்டக்காரர்கள் ஒன்றுகூடி யானையை விரட்டினார். ஆனால், மிரட்டலை கண்டு கொள்ளாத யானை கரும்பை சாப்பிடும் நோக்கத்திலே இருந்தது. இது சம்பந்தமாக, அந்தியூர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டதின் பேரில், 10க்கும் மேற்பட்ட வனத்துறையினர் பட்டாசு வெடித்தும், தீப்பந்தத்தை காட்டியும் விரட்டினர். 3 மணி நேர போராட்டத்துக்குப் பின், தோட்டத்தை விட்டு வெளியேறியது. கடந்த ஒரு வாரத்துக்கு முன், ராமசாமி என்பவரது தோட்டத்தில் புகுந்த யானைக்கூட்டம் 50க்கும் மேற்பட்ட வாழை மரங்களை நாசம் செய்தது குறிப்பிடத்தக்கது.