| ADDED : ஜூலை 15, 2011 12:44 AM
பெருந்துறை: 2007ல் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி கொடும்பாவியை எரித்ததாக, பெருந்துறை அ.தி.மு.க., எம்.எல்.ஏ., மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ., உட்பட அ.தி.மு.க.,வினர் 47 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த 2007 ஜூன் 7ம் தேதி அ.தி.மு.க., பொதுச் செயலாளரும், தற்போதைய முதல்வர் ஜெயலலிதாவை அவதூராக பேசிதாக, அப்போதைய முதல்வர் கருணாநிதியின் கொடும்பாவியை, அ.தி.மு.க.,வினர்கள் எரிந்தனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அண்ணாசிலை அருகில், பெருந்துறை முன்னாள் எம்.எல்.ஏ., பொன்னுதுரை தலைமையில், எம்.எல்.ஏ., வெங்கடாசலம் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட, 49 பேர் கொடும்பாவி எரித்தனர். அவர்களில் இரண்டு பெண்களை தவிர, மற்ற 47 பேர் மீது பெருந்துறை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு, பெருந்துறை உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கடந்த 2009 நவம்பர் 6ம் தேதி குற்ற பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது. இவ்வழக்கில் கடந்த 12ம் தேதி அரசு தரப்பு வக்கீல் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வக்கீல்களுக்கு இடையே விவாதம் நடந்து முடிந்தது. 'குற்றம் சரிவர நிரூபிக்கப்படவில்லை என்பதால், குற்றம் சாட்டப்பட்டவர்களை வழக்கில் இருந்து விடுதலை செய்வதாக' நீதிபதி ரவி நேற்று தீர்ப்பளித்தார்.