கோபி: ''துறை ரீதியான கூட்டங்களுக்கு, இரண்டாம் நிலை அலுவலர்களை அனுப்ப வேண்டாம்,'' என, கோபி ஆர்.டி.ஓ., கண்ணப்பன் தெரிவித்தார்.சாலை விரிவாக்கப்பணிகள், வாய்க்கால் கரை பகுதிகளுக்கு இடையூறாக உள்ள மரங்களை அகற்ற அனுமதி அளித்தது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்கான கூட்டம், கோபி ஆர்.டி.ஓ., கண்ணப்பன் தலைமையில் அவரது அலுவலகத்தில் நேற்று நடந்தது.இக்கூட்டத்தில், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட தாசில்தார் (நிலமெடுப்பு), கோபி மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர், யூனியன் பி.டி.ஓ.,க்கள் மற்றும் கோபி நகராட்சி கமிஷனர் வரை வராமல், அவர்களின் இரண்டாம் நிலை அலுவலர்கள் மட்டுமே பங்கேற்றனர். துறை ரீதியாக முறையாக கடிதம் அனுப்பியும், மிக அருகே கோபி நகராட்சி அலுவலகம் இருந்தும் அதன் கமிஷனர் கூட கூட்டத்துக்கு வரவில்லை. இது போன்ற கூட்டத்துக்கு முக்கியத்துவம் தராமல், இனி அடுத்த கூட்டத்துக்கு, இரண்டாம் நிலை அலுவலர்களை அனுப்ப வேண்டாம். அடுத்த கூட்டத்துக்கு, முறையான விபரங்களுடன் வர வேண்டும். ஏரி, வாய்க்கால் பகுதியில், பனை மரக்கன்றுகள் நட வேண்டும். அடுத்த கூட்டத்தில், அனைத்து தாசில்தார்களும், கட்டாயம் பங்கேற்க வேண்டும் என, கோபி ஆர்.டி.ஓ., கண்ணப்பன் கூட்டத்தில் உத்தரவிட்டார்.பின் ஆர்.டி.ஓ., கண்ணப்பன் பேசியதாவது: மரங்களை நிர்வாகம் செய்வது குறித்து, ஒவ்வொரு விவசாய சங்கத்தில் இருந்து இருவர் மற்றும் தாசில்தார், அத்துடன் ஆர்.டி.ஓ., தலைமையில் கமிட்டி அமைக்கப்படும். அந்த கமிட்டி மூலம், எங்கெங்கு மரக்கன்றுகள் வைக்க வேண்டும் என்பதை கண்டறிய வேண்டும். மரம் வெட்டிய இடத்தை, கமிட்டி பார்வையிட்டு அங்கு மரக்கன்றுகள் நட வேண்டும். இவ்வாறு பேசினார்.