| ADDED : ஆக 08, 2024 01:39 AM
ஈரோடு, ஈரோட்டில், ஆடிட்டர் வீட்டு திருட்டில் முக்கிய குற்றவாளியை கஸ்டடி எடுத்து விசாரணை நடத்த போலீசார் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.ஈரோடு, சூரம்பட்டி என்.ஜி.ஜி.ஓ. காலனி 7வது வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணி, 69, ஆடிட்டர். இவர் மனைவி சாதனா. இருவரும் கடந்த ஜூன், 8 காலை வீட்டை பூட்டி விட்டு தேனிக்கு சென்றனர். இரவு இவரது வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், 235 பவுன் நகை, 48 லட்சம் ரூபாயை திருடி சென்றனர். சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இதில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை சேர்ந்த அருண் குமார். வேலுார் குடியாத்தம் பகுதி விக்னேஷ். ஈரோடு திண்டல் காரப்பாறையை சேர்ந்த சத்யன். ஆம்பூர் விண்ணமங்கலத்தை சேர்ந்த குமரன், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பாகலுார் சாலை மூவேந்தர் நகரை சேர்ந்த தியாகராஜன் மகன் வினு சக்கரவர்த்தி ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.இவர்களிடம் இருந்து ஒரு கார், 76 லட்சம் ரூபாய், 132 பவுன் நகைகள் மீட்கப்பட்டது. முக்கிய குற்றவாளியான, கர்நாடகாவை சேர்ந்த நாராயண ரெட்டியை சூரம்பட்டி போலீசார் நெருங்கினர். அப்போது பெங்களூருவில் நடந்த திருட்டு வழக்கில், போலீசாரால் நாராயண ரெட்டி கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பது தெரியவந்தது. இந்நிலையில், அவரை பெங்களூரு சிறையில் இருந்து கஸ்டடி எடுத்து, இந்த திருட்டு வழக்கில் மேலும் தொடர்புடைய நபர்கள் குறித்தும், திருடப்பட்ட நகை, பணம் உள்ளிட்டவற்றை கைப்பற்றவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.