ஈரோடு:ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு நேற்று, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 750க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. சில வாரங்களாக, 500 முதல் 650க்கும் குறைவான மாடுகளே வரத்தானதால், வியாபாரிகள் உற்சாகம் அடைந்தனர்.சந்தை நிர்வாகிகள் கூறியதாவது: நேற்று, 5,000 ரூபாய் முதல், 25,000 ரூபாய் வரையிலான விலையில், 50 கன்றுகள், 20,000 ரூபாய் முதல், 70,000 ரூபாய் மதிப்பில், 300 எருமை மாடுகள், 20,000 ரூபாய் முதல், 85,000 ரூபாய் மதிப்பில், 350 பசு மாடுகள், 80,000 ரூபாய்க்கு மேலான விலையில், 50க்கும் மேற்பட்ட கலப்பின மாடுகள் விற்பனைக்கு வந்தன.முதல் கட்டத்தில் தமிழகத்தில் தேர்தல் நிறைவடைந்தாலும், தென் மாநிலங்களில் தேர்தல் நடந்ததால், பணத்தை எடுத்து வரவும், மாடுகளை வாங்கி செல்லவும் விவசாயிகள், வியாபாரிகள் சிரமப்பட்டனர்.தற்போது தென் மாநிலங்களில் தேர்தல் நிறைவடைந்து, பணம் எடுத்து செல்வதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், நேற்று அதிக எண்ணிக்கையில் விவசாயிகள், வியாபாரிகள் வந்தனர்.தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநில வியாபாரிகள் அதிகம் வந்தனர். தற்போது கோடை மழை துவங்கியதாலும், தென் மாநிலங்களிலும் பரவலாக மழை துவங்கியதாலும் ஆர்வமாக மாடுகளை வாங்கி சென்றனர். வரத்தான மாடுகளில், 90 சதவீதம் விற்றன. இவ்வாறு கூறினர்.