ஈரோடு:லோக்சபா தேர்தலின் போது ஏப்., 6ல், தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், 4 கோடி ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.இது தொடர்பாக, பா.ஜ., - எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரனின் ேஹாட்டல் ஊழியர்களான சதீஷ், அவரது சகோதரர் நவீன், உறவினர் பெருமாளை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது.பா.ஜ., தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் கோவர்த்தனன், மாநில பொருளாளர் சேகர், அமைப்பு செயலர் கேசவ விநாயகத்திடம் விசாரித்தனர். தொடர்ந்து நயினார் நாகேந்திரன், அவரது உதவியாளர் மணிகண்டன், திருநெல்வேலி பா.ஜ., பொறுப்பாளராக இருந்த முரளீதரன் ஆகியோர் ஜூலை, 16ல் சென்னை சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.இவ்விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் 1வது பிளாட்பார்மில் ேஹாட்டல் நடத்தி வரும், சென்னிமலை சாலை, பெரிய தோட்டத்தை சேர்ந்த முஸ்தபா, 53, பிடிபட்ட, 4 கோடி ரூபாய் தன்னுடையது என, சென்னை சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் உரிமை கோரி, ஏற்கனவே கடிதம் அனுப்பி இருந்தார்.நேற்று முன்தினம் சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில், அவரிடம் 12 மணி நேரம் விசாரணை நடந்தது. மூன்று மாதங்கள் கழித்து பணத்துக்கு சொந்தம் கொண்டாடுவது குறித்தும், பண பரிமாற்றத்துக்கான ஆதாரங்களையும் விசாரணையின் போது, சி.பி.சி.ஐ.டி., போலீசார் முஸ்தபாவிடம் கேட்டுள்ளனர்.