| ADDED : ஜூலை 09, 2024 02:38 AM
ஈரோடு:ஈரோடு மாவட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் மூர்த்தி, அய்யண்ணன், ராஜேந்திரன் உட்பட, 50க்கும் மேற்பட்டோர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கி கூறியதாவது: ஈரோடு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இங்கு போக்குவரத்து நெரிசலுக்கு மாட்டு வண்டிகள் காரணமாவதாக கூறி, ஆர்.டி.ஓ., தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். பல ஆண்டாக மாட்டு வண்டி மூலம் சுமைப்பணி வேலை செய்து வருகிறோம். மாறாக, மோட்டார் வாகனம் பயன்படுத்த அறிவுறுத்துகின்றனர். ஆனால், நாங்கள் மாட்டு வண்டிக்கு பதில் மோட்டார் வாகனம் பயன்படுத்தவுள்ளோம் என்பதை உணராமல், பிற மோட்டார் வாகனம் பயன்படுத்துவோர், சுமைப்பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக மாட்டு வண்டிக்கு மாற்றாக மோட்டார் வாகனத்தில் சுமைப்பணி வேலையை நாங்களே செய்து கொள்வது குறித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு பெற்றோம். இதுபற்றி பல கட்ட பேச்சுவார்த்தை அடிப்படையில், கடந்த மாதம், 11ல் ஆர்.டி.ஓ., வழங்கிய உத்தரவில், மாட்டு வண்டிக்கு மாற்றாக மோட்டார் வாகனம் மூலம் சுமைப்பணி செய்ய அனுமதித்து ஆணையிட்டுள்ளார். இதனால் சுமைப்பணியாளர், மோட்டார் வாகனங்கள் ஏற்கனவே பயன்படுத்துவோருக்கும், எங்களுக்கும் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் அபாயம் உள்ளது. மோதலை தவிர்த்து, பாதுகாப்பு வழங்கி, சுமூகமாக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.