ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில், 19.97 லட்சம் வாக்காளர்களில், 14 லட்சம் படிவங்கள் திரும்ப பெறப்பட்டதாக, கலெக்டர் கந்தசாமி தெரிவித்தார்.இதுகுறித்து ஈரோட்டில் நேற்று அவர் கூறியதாவது:கடந்த, 4 முதல் எஸ்.ஐ.ஆர்., படிவம் வழங்கப்பட்டு வரும் நிலையில், டிச., 4 வரை திரும்ப பெறப்படும். மாவட்டத்தில், 19.97 லட்சம் வாக்காளர்களில், 1 சதவீதம் தவிர மற்றவர்களுக்கு படிவம் வழங்கப்பட்டு விட்டது. இதுவரை, 14 லட்சம் படிவம் பூர்த்தி செய்து திரும்ப பெற்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 1,946 படிவங்கள் ஆன்லைனில் நிரப்பி அனுப்பியுள்ளனர்.பெறப்பட்ட, 73 சதவீத படிவங்களில், 2002 வாக்காளர் விபரத்துடன் பூர்த்தி செய்த அல்லது பி.எல்.ஓ.,க்களால் உறுதி செய்த, 25 சதவீத வாக்காளர் (4.95 லட்சம்) விபரம் பதிவேற்றி, உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களது உறவினர்கள், குடும்ப உறுப்பினர்கள் என, 26 சதவீதம் (5.22 லட்சம்) பேர் படிவமும் உறுதி செய்து, 51 சதவீத படிவங்கள் இடம் பெறும்.'ஆள் இல்லை, இடமாற்றம், இறந்துவிட்டார்' என்ற, 3 இனங்களில், 58,875 படிவங்கள் (2.95 சதவீதம்) உள்ளன. 'நோ மேட்ச்' என்ற இனங்களில், 2002 வாக்காளர் பட்டியல் விபரம், உறவினர் வாக்காளர் பட்டியல் இணைப்பு விபரம் வழங்காதவர்களை நீக்கம் செய்யவில்லை. பீகார் உட்பட பிற மாநிலங்களில் இருந்து வந்தவர்களாக இருந்தாலும், இங்கு வெகு காலமாக இருந்து, படிவத்தில் கேட்கப்பட்ட விபரம் சரியாக இருந்தால் சேர்க்கப்படுவர். இவ்வாறு கூறினார். அப்போது டி.ஆர்.ஓ., சாந்தகுமார், தேர்தல் பிரிவு தாசில்தார் சங்கர்கணேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முகமது குதுரத்துல்லா உடனிருந்தார்.