| ADDED : நவ 20, 2025 01:50 AM
புன்செய்புளியம்பட்டி, பவானிசாகர் அருகே, விவசாய நிலங்களில் புகும் காட்டு யானைகள் வாழை மற்றும் விவசாய பயிர்களை தொடர்ந்து சேதம் செய்து வருகின்றன.பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட கொத்தமங்கலம் மற்றும் புதுப்பீர்கடவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய, 5 காட்டு யானைகள் கடந்த சில நாட்களாக புதுப்பீர்கடவு ஊராட்சிக்குட்பட்ட புதுக்காடு பகுதியில் நடமாடுகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள, விவசாயி ஜனனி பிரியா தோட்டத்திற்குள் புகுந்த, 5 காட்டு யானைகள் அங்கு பயிரிடப்பட்டிருந்த, ஜி 9 ரக வாழை மரங்களை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தின. அப்போது தங்கியிருந்த தொழிலாளர்கள், அருகில் விவசாயிகள் காட்டு யானைகள் நடமாடுவதை கண்டு அச்சமடைந்தனர். பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.ஆனாலும், 200க்கும் மேற்பட்ட வாழை மரங்களை யானைகள் தின்றும் மிதித்தும் சேதப்படுத்தின. இதை தொடர்ந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து யானைகளை நீண்ட போரா ட்டத்திற்கு பின், வனப்பகுதிக்குள் விரட்டினர்.