| ADDED : டிச 04, 2025 05:57 AM
ஈரோடு: ஈரோடு கொல்லம்பாளையத்தில், ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.ஈரோடு, கொல்லம்பாளையம் கரூர் பைபாஸ் சாலை ஆஸ்ரம் பள்ளி அருகே, ஐ.ஓ.பி., வங்கி ஏ.டி.எம்., மையம் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:00 மணியளவில் ஏ.டி.எம்., மையத்தில் மர்ம நபர் நுழைந்துள்ளார். பிறகு ஏ.டி.எம்., இயந்திரத்தை ஸ்குரூ டிரைவர் கொண்டு திறக்க முயன்றுள்ளார். அப்போது அலாரம் அடித்ததால், உடனடியாக அங்கு வங்கி ஊழியர் ஒருவர் வந்துள்ளார். அதற்குள் மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றார். அப்போது, மையத்தில் உள்ள ஒயர் கட்டாகி இருந்தது தெரியவந்தது. பின்னர், ஏ.டி.எம்., முன்புற ஷட்டரை மூடி விட்டு வங்கி ஊழியர் சென்று விட்டார்.நேற்று காலை, 11:00 மணியளவில் வங்கி நிர்வாகத்தினர், 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் ஏ.டி.எம்., இயந்திரத்தின் பாகங்களை கழற்றி பணத்தை திருட முயற்சித்தது தெரியவந்தது. ஏ.டி.எம்., இயந்திரத்தில், 12 லட்சம் ரூபாய் இருந்ததாக வங்கி பணியாளர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.