எஸ்.கே.எம்., குழுமங்கள் தலைவர் மயிலானந்தன் சதாபிஷேக விழா
கோவை:ஈரோடு எஸ்.கே.எம்., குழுமங்கள் மற்றும் வேதாத்திரி மகரிஷியின், உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவர் எஸ்.கே.எம்.மயிலானந்தன்- - குட்டி லட்சுமி தம்பதியின் சதாபிஷேக விழா, கோவை கொடிசியா அரங்கில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. பண்ணாரி அம்மன் குழுமம் மற்றும் ஆழியாறு அறிவுத் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். உலக சமுதாய சேவா சங்கத்தின் துணைத் தலைவர்களும், ஆழியாறு அறிவுத் திருக்கோவில் அறங்காவலர்களும் இணைந்து, உலக சமுதாய சேவா சங்கத்திற்கு வளர்ச்சி நிதியாக 9 கோடி ரூபாய் வழங்கினர். சதாபிஷேக விழாவை முன்னிட்டு, அவிநாசி தாமரைகுளத்தில் 8,000 பனை மரக்கன்றுகள் நடும் விழா, உலக சமுதாய சேவா சங்கத்திற்கு வளர்ச்சி நிதி வழங்கும் விழா என, முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. மயிலானந்தன் பற்றிய வாழ்க்கை வரலாறு குறும் படம், ராம்ராஜ் காட்டன் சார்பில் வெளியிடப்பட்டது. விழாவில், எஸ்.கே.எம்.மயிலானந்தன் பேசியதாவது: ஜாதி, மத, இன வேறுபாடுகளை கடந்து மக்கள் மனம் பண்பட்டு, ஆத்ம ஞானம் அடைவதற்கு உரிய பயிற்சிகளை மனவளக்கலை வழங்குகிறது. பிறருக்கு துன்பம் தராமலும், பிறரால் தனக்கு துன்பம் உண்டாகாமலும் வாழக்கூடிய வாழ்க்கை நெறியை கற்று தருகிறது. இந்த விழா எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், தொடர்ந்து தொண்டு செய்யும் உற்சாகத்தையும் தருகிறது. இவ்வாறு அவர் பேசினார். விழாவில், மனவளக்கலை ஆர்வலர்கள், கொங்கு மண்டலத்தின் முக்கிய தொழில் பிரமுகர்கள் மற்றும் உறவினர்கள் திரளாக பங்கேற்றனர்.