600லிருந்து 200 ஆன முதல்வர் நிகழ்ச்சி பயனாளிகள்
ஈரோடு: ஈரோடு மாவட்டம், பெருந்துறையில், முதல்வர் விஜய் இன்று பங்கேற்கும் அரசு நிகழ்ச்சியில், நலத்திட்ட உதவி பெறும் பயனாளிகள் எண்ணிக்கை, 600ல் இருந்து 200 ஆக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விரைவில், ஐந்து தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடக்கவுள்ள புதுக் கோட்டை மாவட்டத்தில், முதல்வர் விஜய் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அங்கு, ஆரம்பத்தில் பிரமாண்டமாக நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டு, ஆயுதப்படை மைதானத்தில் மேடை அமைக்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கிற்கு விழா மாற்றப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பயனாளிகள் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது. இதற்கான காரணம் குறித்து அதிகாரிகளுக்கே எந்த தெளிவும் இல்லை. இந்நிலையில் ஈரோடு மாவட்டம், பெருந்துறை தொகுதியில், முதல்வர் விஜய் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சி இன்று நடைபெற உள்ளது. தனியார் கல்லுாரி வளாக ஆடிட்டோரியத்தில் நிகழ்ச்சியை நடத்தவும், 600 பயனாளிகள் வரை அதில் பங்கேற்க செய்யவும் திட்டமிடப்பட்டது. பல்வேறு காரணங்களால், பெருந்துறை – காஞ்சிகோவில் சாலை, புறவழிச்சாலையை ஒட்டிய, லட்சுமி நாராயணா திருமண மண்டபத்தில் நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு, 200க்கும் குறைவான பயனாளிகளை அமர வைக்கவும், 150க்கும் உட்பட்ட அதிகாரிகள், கட்சியினர் பங்கேற்கும் வகையில் நிகழ்ச்சி சுருக்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், ‘‘எவ்வளவு பேருக்கு நலத்திட்ட உதவி முதல்வரால் வழங்கப்படும் என முடிவு செய்யவில்லை,’’ என்றார்.