உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சாயப்பட்டறை கழிவால் பாதித்த விவசாயிகளுக்கு இழப்பீடு

சாயப்பட்டறை கழிவால் பாதித்த விவசாயிகளுக்கு இழப்பீடு

ஈரோடு, ஈரோடு, சோலார் புது பஸ் ஸ்டாண்டில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. கலெக்டர் கந்தசாமி வரவேற்றார்.முதல்வர் ஸ்டாலின், 91.09 கோடி ரூபாய் மதிப்பில், 23 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, 235.73 கோடி ரூபாய் மதிப்பில், சோலார் பஸ் ஸ்டாண்ட் உட்பட, 790 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 1.84 லட்சம் பயனாளிகளுக்கு, 278.62 கோடி ரூபாயில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது: கடந்தாண்டு மார்ச், டிச., மாதங்களில் பொள்ளாச்சி, ஈரோட்டில் நடந்த அரசு விழாக்களில் அறிவிக்கப்பட்ட, 12 அறிவிப்புகளின் நிலையை கேட்டறிந்தேன். ஈரோடு மாநகராட்சியில், 106.78 கி.மீ., நீளத்துக்கு சாலை சீரமைப்பு பணியில், 79.83 கி.மீ., நீளத்துக்கான பணி முடிந்து பிற பணிகள் டிச., 10க்குள் முடிக்கப்படும் என்றனர்.தற்போது ஈரோடு புதிய பஸ் ஸ்டாண்ட், பொல்லான் முழு உருவச்சிலையுடன் அரங்கம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு கங்காபுரத்தில் தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைக்கப்படுகிறது. மஞ்சள் பொது வசதி மையம் கட்டும் பணி நடந்து வருகிறது. 17 ஊரக பாலங்கள், 73 நெடுஞ்சாலை பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 400 கோவில்களில், 554 பணிகள் நடந்துள்ளன. 150 கோவில்களில், 218 பணிகள் முடிக்கப்பட்டு, 133 கோவில்களில் குடமுழுக்கு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதுபோல, எண்ணற்ற திட்டங்கள் இம்மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளன.இம்மாவட்டத்தில், 4 லட்சத்து, 9,354 பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. மீதமுள்ளவர்களுக்கு டிச., 15க்குள் வழங்கப்படும். 59,262 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, 51,070 மகளிர் குழுவுக்கு, 3,203 கோடி கடனுதவி, மக்களை தேடி மருத்துவ திட்டத்தில், 8 லட்சத்து, 65,000 பேர் பயன் பெற்றுள்ளனர். 'இன்னுயிர் காப்போம்; நம்மை காக்கும் 48' திட்டத்தில், 9,262 பேரின் உயிர் காக்கப்பட்டுள்ளது. 5,865 பெண்களுக்கு திருமண உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. 12,819 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது.அந்தியூர் தாலுகாவில், 29 கிராமங்களில், 70 ஆண்டுக்கு முன் நில ஒப்படைப்பு வழங்கியபோது, 6,000 ெஹக்டர் பட்டா நிலங்களை, தமிழ் நில பதிவேடுகளில், நிபந்தனை பட்டா என குறிப்பிட்டதை நீக்கி, நிரந்தர பட்டாவாக மாற்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம், 2,680 நில உடமைதாரர்கள் பயன் பெறுகின்றனர். இம்மாவட்டத்தில் கடந்த நான்கரை ஆண்டில், 5,491 கோடி மதிப்பில், 85,232 பேருக்கு நலத்திட்ட உதவிகள், 3,836 கோடி ரூபாயில், 19,488 வளர்ச்சி திட்டப்பணிகள் செய்யப்பட்டுள்ளது.இங்கு, 6 புதிய திட்ட அறிவிப்பை வெளியிடுகிறேன். 1. புன்செய் புளியம்பட்டி நகராட்சிக்கு, 4.30 கோடியிலும், கோபி நகராட்சிக்கு, 4.50 கோடியிலும் புதிய நகராட்சி அலுவலகம் கட்டப்படும். 2. பவானிசாகர் மற்றும் கீழ்பவானி நீர் பாசன திட்டங்களின் கீழ், திட்ட நிபந்தனையுடன் வழங்கப்பட்ட பட்டாக்களை, நிரந்தர பட்டாவாக மாற்றப்படும். இதனால் நம்பியூர், சத்தியமங்கலம், பவானி, கோபி, மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை பகுதிகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் பட்டாக்கள், நிரந்தர பட்டாவாகும்.3. அந்தியூர் அருகே தோனிமடுவு பள்ளத்தின் குறுக்கே, ரூ.4 கோடியில் புதிய தடுப்பணை அமைக்கப்படும். 4. சாயப்பட்டறை கழிவுகளால் பாதிக்கப்பட்ட, நொய்யல் ஆற்று பாசன விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது பற்றி, பல வழக்குகள், சட்ட சிக்கல்களை தீர்க்க ஆராய, வல்லுனர் குழு அமைக்கப்படும்.5. பெருந்துறையில், ரூ.5 கோடி யில் ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டப்படும். 6. அந்தியூர், எண்ணமங்கலம் வருவாய் கிராமங்களில் உள்ள நிலங்களுக்கான பதிவேடுகளில் உள்ள நிபந்தனை பட்டாக்கள் அயன் பட்டாவாக மாற்றப்படும். இதுபோன்ற எண்ணற்ற திட்டங்கள் இம்மாவட்டத்துக்கும், தமிழகத்துக்கும் வழங்க மக்கள் துணை நிற்க வேண்டும். மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சிதான் என உறுதியாகிவிட்டது. வளர்ச்சி பணிகள் தடையின்றி, இரு மடங்கு வேகத்துடன் தொடரும். இவ்வாறு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ