| ADDED : பிப் 20, 2024 10:31 AM
ஈரோடு: தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த, நுாறு நாள் வேலை திட்டப்பணியாளர்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு மனு வழங்குவதற்காக வந்தனர். திடீரென அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: மலைப்பகுதி, சத்தியமங்கலம் கிராமங்களில் அறுவடை காலம் முடிந்துவிட்டதால், வேறு வேலை வாய்ப்புக்கு வழியில்லை. நுாறு நாள் வேலை திட்டப்பணி மட்டுமே, வாழ்வாதாரமாக உள்ளது. எனவே இத்திட்டத்தில் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும். அத்துடன் எட்டு மாதமாக வேலை செய்தமைக்கான ஊதியம் இதுவரை வழங்கவில்லை. இதனால் உணவுக்கே சிரமப்படுகிறோம். இவ்வாறு கூறினர். போலீசார் அனைவரையும் அழைத்து சென்று, கலெக்டரிடம் மனு வழங்க செய்தனர். மனுவை பெற்ற கலெக்டர், விரைவாக ஊதியம் கிடைக்க வழி செய்வதாக உறுதியளித்தார்.இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், 'மத்திய அரசு, 2, 3 மாதங்களுக்கு ஒரு முறை, நுாறு நாள் வேலை திட்டத்துக்கான ஊதிய நிதியை விடுவிக்கின்றனர். அதன்பின் யூனியன் வாரியாக பிரித்து மொத்தமாக ஊதியத்தை வழங்கி வருகிறோம். மாவட்டத்தில் சில பகுதியில், 2 மாதமும், சில பகுதியில், 3 மாதமாக வழங்கவில்லை' என்றனர்.