உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / எஸ்.பி., அலுவலகத்தில் தம்பதி தீக்குளிக்க முயற்சி ஆசை காட்டி ஆஸ்தியை பறித்ததாக அலறல்

எஸ்.பி., அலுவலகத்தில் தம்பதி தீக்குளிக்க முயற்சி ஆசை காட்டி ஆஸ்தியை பறித்ததாக அலறல்

ஈரோடு: கோபி, கவுண்டம்பாளையம் பனங்காட்டு கொரையை சேர்ந்தவர் மாரன், 53; இவர் மனைவி சுலோச்சனா, 45; இருவரும் ஈரோடு எஸ்.பி., அலுவலகத்துக்கு நேற்று மதியம் வந்தனர். உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு, தீக்குளிக்க முயன்றனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இதை தடுத்து, விசாரணைக்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து மாரன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:பனங்காட்டுகொரையில் காலி இடத்துடன், 5.5 சென்டில் தார்சு வீடு, கவுண்டன்பாளையத்தில், 2.5 சென்ட் காலியிடம் உள்ளது. மகள்களின் திருமண செலவுக்காக டி.என்.பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமியிடம், 2017ல், இரண்டு ரூபாய் வட்டிக்கு, 12 லட்சம் ரூபாய் கடன் பெற்றேன். 2019ல் மேலும், 10 லட்சம் ரூபாய் கடன் கேட்டேன். அவரோ தாட்கோ மூலம் மானியத்துடன் கடன் வாங்கி தருவதாக கூறினார். அவருடன் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தாட்கோ அலுவலகம் சென்றேன். பழனிச்சாமி மட்டும் அங்குள்ளவர்களிடம் பேசி விட்டு, 25 லட்சம் ரூபாய் கடன் தருவதாகவும், அதில், 10 லட்சம் ரூபாய் மானியம். 15 லட்சம் திரும்ப செலுத்தினால் போதும். வட்டி கிடையாது என்றார்.அதேசமயம் அரசு மானியம் பெற தொழில் செய்வது போல காட்ட, வீட்டு பட்டா மற்றும் காலியிட பட்டாவில் சில மாற்றங்கள் செய்யுமாறு கூறி, டி.என்.பாளையம் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு எடுத்து சென்று, அவர் சொல்லிய இடத்தில் கையெழுத்திட்டேன்.மூன்று மாதத்தில், 25 லட்சம் ரூபாய் தாட்கோவில் இருந்து வந்து விடும். அதன்பின் தனக்கு சேர வேண்டிய, 12 லட்சம் ரூபாயை வட்டியுடன் கொடுத்து விட்டு கடன் பத்திரத்தை வாங்கி கொள் என்றார். ஆனால், பழனிச்சாமி கூறியபடி தாட்கோ கடன் கிடைக்கவில்லை. அதேசமயம் எனது காலியிடத்தில் கம்பி வேலி போட்டு ஆக்கிரமித்தார். வீட்டை விற்பனை செய்வதாக கூறி பலரை வந்து பார்க்க வைத்தார். பழனிச்சாமியிடம் கேட்டபோது, வீடு மற்றும் காலியிடத்தை எனது பெயருக்கு கிரயம் செய்து வழங்கி விட்டாய் என்றார். தற்போது வீட்டை காலி செய்யவில்லை என்றால், வீட்டை இடித்து விடுவேன் என மிரட்டினார்.இதுகுறித்து பங்களாபுதுார் போலீஸ் ஸ்டேஷனில் ஓராண்டுக்கு முன் புகாரளித்தேன். அப்போது பழனிச்சாமியை அழைத்து விசாரித்தனர். ஒரு மாதத்தில் வீட்டையும், காலி இடத்தின் மீதுள்ள கிரயத்தை ரத்து செய்து எனது பெயரில் மறு கிரயம் செய்து தருவதாக உறுதியளித்தார். ஆனால், இதுவரை அவ்வாறு செய்யவில்லை. பழனிச்சாமி மீது உரிய நடவடிக்கை எடுத்து, எனது வீட்டை, காலி இடத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ