உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரசு நிலத்தில் பட்டப்பகலில் மண் கடத்தல்;ஆய்வுக்கு வந்த ஆர்.ஐ.,-வி.ஏ.ஓ., மழுப்பல்

அரசு நிலத்தில் பட்டப்பகலில் மண் கடத்தல்;ஆய்வுக்கு வந்த ஆர்.ஐ.,-வி.ஏ.ஓ., மழுப்பல்

புன்செய் புளியம்பட்டி:புன்செய்புளியம்பட்டியை அடுத்த மாதம்பாளையம் பஞ்., மாராயிபாளையம் முருகன் கோவில் மலை அடிவாரத்தில், 50 ஏக்கர் பரப்பளவில் அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இதன் ஒரு பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. மீதியுள்ள இடத்தில் வண்டல், செம்மண் உள்ளது.இங்கு ஒரு கும்பல் மண் வெட்டி கடத்தலில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின்படி கிராம மக்கள், விவசாயிகள், நேற்று மதியம் அங்கு சென்றனர். அங்கு ஹிட்டாச்சி இயந்திரத்தின் மூலம் மண்ணை வெட்டி, ஐந்து டிப்பர் லாரிகளில் ஏற்றிக் கொண்டிருந்தனர். விவசாயிகளை பார்த்த கும்பல், டிப்பர் லாரிகளுடன் சென்று விட்டது. ஹிட்டாச்சி இயந்திரத்தை விவசாயிகள் சிறைபிடித்து, புளியம்பட்டி போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். புன்செய்புளியம்பட்டி ஆர்.ஐ., ரகுநாதன், மாதம்பாளையம் வி.ஏ.ஓ., சபரி சென்று ஆய்வு மேற்கொண்டனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:ஆன்லைனில் விண்ணப்பித்து அரசு அனுமதி பெற்று, அதற்கான பாஸ் மூலம் மண் எடுத்து வருகின்றனர். நீர்த்தேக்க குட்டை, மேய்ச்சல் நிலத்தில் மண்வெட்டி எடுப்பதாக விவசாயிகள் தெரிவித்த புகாரின் அடிப்படையில் ஆய்வு செய்ய வந்தோம். தாசில்தார் உள்ளிட்ட ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், ஈரோட்டில் மீட்டிங்கில் இருப்பதால், இதுகுறித்து விரிவாக கூற முடியாது. இவ்வாறு கூறினர்.விவசாயிகள் கூறியதாவது: நீர்த்தேக்க குட்டை, மேய்ச்சல் நிலங்களில் வண்டல், செம்மண் வெட்டி கடத்தி செங்கல் சூளைக்கு ஒரு லோடு, 8,000 ரூபாய்க்கு மேல் விற்கின்றனர். ஒரு நாளைக்கு அனுமதி பெற்றுவிட்டு மாதக்கணக்கில் மண் திருடுகின்றனர். அனுமதி முறையாக இருந்தால் எங்களை கண்டதும் லாரிகளை எடுத்துக்கொண்டு ஏன் ஓட வேண்டும். உள்ளூர் வருவாய் துறை அதிகாரிகளுக்கு தெரியாமல், பட்டப்பகலில் மண் கடத்தல் நடப்பது சாத்தியமில்லை. ஆய்வுக்கு வந்த ஆர்.ஐ., - வி.ஏ.ஓ., மழுப்புகின்றனர். தாசில்தார் மற்றும் கலெக்டர் ஆய்வு செய்ய வேண்டும். அப்போதுதான் கடத்தி எடுக்கப்பட்ட மண்ணின் அளவு, கடத்தலில் ஈடுபட்ட கும்பல் யார் என்பதும் தெரியவரும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ