உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரயில்வே இடத்தில் கட்டப்பட்ட ஆஞ்சநேயர் கோவில் அகற்றம்

ரயில்வே இடத்தில் கட்டப்பட்ட ஆஞ்சநேயர் கோவில் அகற்றம்

ஈரோடு:ஈரோடு, கள்ளுக்கடை மேடு பகுதியில், ராமபக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. மாநகராட்சி மற்றும் ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் கோவில் கட்டப்பட்டிருப்பதாகவும், அதை அகற்ற வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்பில் உள்ள கோவிலை இடித்து அகற்ற 2023ல் உத்தரவிட்டிருந்தது. மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. விசாரித்த நீதிமன்றம், ஒரு வாரத்துக்குள் கோவிலை இடித்து விட்டு, அறிக்கை தாக்கல் செய்ய ஈரோடு கலெக்டர், மாநகராட்சி கமிஷனருக்கு உத்தரவிட்டது.இதன் அடிப்படையில், நேற்று முன்தினம் கோவிலுக்கு வந்த தாசில்தார், மாநகராட்சி அதிகாரிகள், சர்வேயர், ரயில்வே அதிகாரிகள் உள்ளிட்டோர், அப்பகுதியில் அளவீடு பணி மேற்கொண்டனர். இதில், மாநகராட்சிக்கு சொந்தமான, 2,004 சதுர அடியும், ரயில்வே துறைக்கு சொந்தமான இரண்டரை அடி நீளம், 5 அடி அகலம் கொண்ட இடத்தில், ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. பின், கோவிலை அகற்ற முடிவு செய்யப்பட்டது.பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்.,- ஹிந்து முன்னணி அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. தாசில்தார் முத்துகிருஷ்ணன் தலைமையில் பேச்சு நடந்தது. கூட்டத்தில், கோவிலை அப்புறப்படுத்த ஹிந்து அமைப்பினர் ஒப்புக்கொண்டனர். தாசில்தார் முத்துகிருஷ்ணன், 4வது மண்டலஉதவி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, தலைமை பொறியாளர் விஜயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில், பொக்லைன் இயந்திரத்தால் நேற்று காலை கோவில் இடிக்கப்பட்டது.கோவிலையொட்டி, வி.சி., சார்பில் சமீபத்தில் திறக்கப்பட்ட ஆட்டோ ஸ்டாண்டும் அகற்றப்பட்டது. அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில், டி.எஸ்.பி., முத்துக்குமரன் தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.கோவிலில் உள்ள ஆஞ்சநேயர், விநாயகர் சிலைகளை அகற்ற, கோவில் நிர்வாகம் தரப்பில், நேற்று இரவு வரை அவகாசம் கேட்டதால், மாநகராட்சி அதிகாரிகள் அனுமதி அளித்தனர். சிலைகள் அகற்றிய பின், இரண்டாவது நாளாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி இன்றும் தொடரும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.ராம பக்த ஆஞ்சநேயர் பக்தர்கள் குழு சார்பில் வெளியிட்ட அறிக்கையில், 'வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி துாண்டுதலில், கோவில் இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக சிலர் வதந்தி பரப்பி வருகின்றனர். உயர் நீதிமன்ற உத்தரவுக்கும், அமைச்சருக்கும் எந்த தொடர்பும் இல்லை' என, தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை