உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஒரு வாரமாக கோபி வீடுகளில் பூட்டை "திறந்து தொடர் திருட்டு

ஒரு வாரமாக கோபி வீடுகளில் பூட்டை "திறந்து தொடர் திருட்டு

கோபிசெட்டிபாளையம் : கோபியில் வீட்டை திறந்து 12 பவுன் தங்க நாணயம் திருடப்பட்டது. கோபியில் தொடரும் திருட்டு சம்பவங்களால் பொது மக்கள் பீதியடைந்துள்ளனர். கோபி சிலேட்டர் ஹவுஸ்வீதியை சேர்ந்தவர் ஜெயசீலன் (44), தனியார் பள்ளியில் பி.டி., ஆசிரியர். இவரது மனைவி காயத்திரி(39); அரசு பள்ளி ஆசிரியர். ஜூலை 21ம் தேதி வீட்டை பூட்டி விட்டு, அங்குள்ள சுவிட்ச் பாக்ஸில் சாவியை வைத்து விட்டு, இருவரும் பணிக்கு சென்று விட்டனர். திரும்பி வந்து பார்த்தபோது வீடு திறந்திருந்தது. வீட்டுக்குள் சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த தலா ஒரு பவுன் எடையுள்ள 12 தங்க நாணயம், 5,500 ரூபாய் ரொக்கம் ஆகியவை திருட்டு போயிருந்தது. கோபி போலீஸார் விசாரிக்கின்றனர். சமீப காலமாக கோபி பகுதியில் வீட்டை பூட்டி, சாவி வைத்து செல்லும் வீடுகளை நோட்டமிட்டு திருடுவது அதிகரித்துள்ளது. சில நாட்களுக்கு முன், கோபி மொடச்சூர் திரு.வி.க., நகரை சேர்ந்த பள்ளி ஆசிரியை பூமதி (39) வீட்டை பூட்டி விட்டு, வேலைக்கு சென்று விட்டார். வேலை முடிந்து திரும்பி வந்து பார்த்தபோது, பூட்டு உடைத்து கதவு திறக்கப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த 30 ஆயிரம் ரூபாய் மற்றும் மூன்று பவுன் நகை திருடப்பட்டது. கோபி கச்சேரி வீதி, கன்னிகா பரமேஸ்வரி வீதியை சேர்ந்தவர் பாலமுருகன்(45). சமையல் எண்ணெய் ஏஜன்ஸி நடத்துகிறார். பகலில் வீட்டை பூட்டி விட்டு ஏஜன்ஸிக்கு சென்று விடுவர். சாவியை வீட்டு வாசலில் வைத்து விடுவர். சம்பவத்தன்று 26 பவுன் நகை, 5,000 ரூபாய் மதிப்பிலான வெள்ளிக்காசு, 22 ஆயிரம் ரூபாய் ரொக்கம் திருட்டு போனது. கோபியில் தொடர்ச்சியாக அரங்கேறும் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. 'வீடுகளில், கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால், இருவரும் தனித்தனி சாவி பயன்படுத்தலாம். அதை விடுத்து, வீட்டில் மறைவான இடத்தில் சாவியை வைத்துச் செல்வதால்தான் இதுபோன்ற திருட்டுகள் நடக்கிறது. திருட்டை தடுக்க போலீஸார் எவ்வளவோ நடவடிக்கை எடுத்தாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பும் தேவை' என, கோபி போலீஸார் வருத்தம் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ