உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாழைத்தார் ஏலம் தாமதத்தால் விவசாயிகள் மறியல் : கோபி மொடச்சூர் ரோட்டில் பரபரப்பு

வாழைத்தார் ஏலம் தாமதத்தால் விவசாயிகள் மறியல் : கோபி மொடச்சூர் ரோட்டில் பரபரப்பு

கோபிசெட்டிபாளையம்: கோபி வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் ஏலம் தாமதமானதால், ஆத்திரமடைந்த விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோபி மொடச்சூர் ரோட்டில் உள்ள வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், சனி மற்றும் புதன் கிழமைகளில் வாழைத்தார் ஏலம் நடக்கிறது. கோபி, கரட்டடிபாளையம், பெருந்துறை, பவானி, சிறுவலூர், நம்பியூர், அத்தாணி, கள்ளிபட்டி, டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயிகள், வாழைத்தாரை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

சில வாரங்களுக்கு முன் வரை, விவசாயிகளிடம் இருந்து ஆறு சதவீதம் விற்பனை வரி வசூல் செய்யப்பட்டது. 'வரியை ரத்து செய்ய வேண்டும்' என, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, ஆறு சதவீத வரி ரத்து செய்யப்பட்டது.கூட்டுறவு சார்பதிவாளர் மற்றும் சங்கத்தின் விசாரணை அலுவலர் ரங்கராஜ், ஆகஸ்ட் 22ம் தேதியிட்டு, அனைத்து வாழை வியாபாரிகளுக்கும் கடிதம் அனுப்பினார், 'சங்கத்துக்கு செலுத்த வேண்டிய பாக்கி தொகையை உடனடியாக செலுத்த வேண்டும்' என தெரிவித்து இருந்தார்.

சங்கத்துக்கு பாக்கி இல்லாத நிலையில் இவ்வாறு கடிதம் அனுப்பியதால், வாழை வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். 24ம் தேதி நடந்த வாழை ஏலத்தை வியாபாரிகள் புறக்கணித்து, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு பின் ஏலம் நடந்தது. நேற்றைய வாழைத்தார் ஏலத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். கதளி, மொந்தன், நேந்திரம் உள்ளிட்ட பல்வேறு வகையான வாழைத்தார் குவிக்கப்பட்டு இருந்தது. விவசாயிகளுக்கு ஏலத்துக்கான டோக்கன் வழங்கப்பட்டது. ஏலத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் இரண்டு சதவீத வரியும், வியாபாரிகள் இரண்டு சதவீத வரியும் செலுத்த வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த வியாபாரிகள் ஏலத்தில் கொள்ள வில்லை. நான்கு மணி நேரத்துக்கும் மேலாக ஏலம் துவங்காததால், காத்திருந்த விவசாயிகள், மொடச்சூர் ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விவசாயிகள் கூறியதாவது: இதுநாள் வரை எங்களிடம் ஆறு சதவீத வரி வசூல் செய்யப்பட்டது. வரியால் கடுமையாக பாதிக்கப்படுவதாக கோரிக்கை விடுத்ததின் பேரில், வரி ரத்து செய்யப்பட்டது. சங்க அலுவலகத்தில் சில ஆண்டுகளுக்கு முன் பல கோடி ரூபாய் மோசடி நடந்தது. பணத்தை ஈடுகட்ட, விவசாயிகளிடமும், வியாபாரிகளிடமும் வரி வசூல் செய்தனர். எங்களிடம் வசூலித்த வரி போதாது என, வியாபாரிகளிடமும் இரண்டு சதவீத வரி வசூல் செய்தனர். வியாபாரிகள் ஏலத்தை புறக்கணிப்பதால், வாழைத்தார் அழுகுடும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

வாழை வியாபாரிகள் கூறியதாவது: சங்க அலுவலகத்துக்கு நேரடியாக வந்து வாழை எடுத்து செல்கிறோம். பணமும் உடனடியாக செலுத்தி விடுகிறோம். ஒவ்வொரு வியாபாரிக்கும் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் பாக்கி தொகை இருப்பதாக கடிதம் வந்துள்ளது. தற்போது ஏலத்தில் பங்கேற்க இரண்டு சதவீத வரி செலுத்த வேண்டும் என்கின்றனர். எங்களால் வரி செலுத்த முடியாது. இவ்வாறு அவர்கள் கூறினர். மறியலில் ஈடுபட்ட வாழை விவசாயிகளை, கோபி போலீஸார் கலைந்து போகச் செய்தனர். வாழை வியாபாரிகளிடம், போலீஸார் பேச்சு நடத்தி வருகின்றனர். வியாபாரிகள் ஏலத்தை புறக்கணித்ததால், நேற்றிரவு வரை ஏலம் நடக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை