ஈரோடு: பொது விநியோகத்துக்காக, பள்ளியில் வந்து இறங்கிய இலவச கிரைண்டர்களை, பல்வேறு கட்சி வேட்பாளர்கள் முற்றுகையிட்டனர். ஈரோடு காரவாய்க்கால் கச்சேரி வீதி மாநகராட்சி துவக்கப்பள்ளியில், நேற்று மாலை 3 மணிக்கு ஒரு லாரியில் 1,500 கிரைண்டர்கள், அரசின் இலவச திட்டத்துக்காக வழங்க வந்தது. அவற்றை அப்பள்ளியில் முதல் தளத்தில் லோடுமேன்கள் இறக்கி வைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதை அறிந்த அங்குள்ள தி.மு.க.,வினர் மற்றும் மேயருக்கான காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ், ம.தி.மு.க., கவுன்சிலர் வேட்பாளர் வசிலாபானு, தி.மு.க., வேட்பாளர் பஷிராபானு, சுயேட்சை வேட்பாளர் சொர்ணலட்சுமி உட்பட பலர் முற்றுகையிட்டனர்.
''எங்கள் சொந்த செலவுக்காக கொண்டு செல்லும் பணத்தைக்கூட தேர்தல் ஆணையம் என்ற பெயரில் அதிகாரிகள் கைப்பற்றி, கருவூலத்தில் சேர்க்கின்றனர். ஆனால், இங்கு அரசு சார்பில் ஆயிரக்கணக்கான இலவச கிரைண்டர்களை கொண்டு வந்தது தவறானது. இதை பார்க்கும் மக்களுக்கு, ஆளும் கட்சிக்கு ஓட்டுப்போட்டால்தான் தங்களுக்கு இவை கிடைக்கும் என்று எண்ணத்தை ஏற்படுத்தும். இந்த பள்ளி, ஓட்டுச்சாவடியாக உள்ளதால், இங்கு இறக்கக் கூடாது,'' என வேட்பாளர்கள் அனைவரும் கூறினர். வருவாய்த்துறை, போலீஸார் என எவரும் ஒரு மணி நேரத்துக்கு மேல் வரவில்லை. லோடு ஏற்றி வந்தவர்கள், வருவாய்த் துறையினருக்கு பல முறை தகவல் தெரிவித்தும், 4.15 மணிக்குத்தான் தாசில்தார் அருணாசலம், டி.எஸ்.பி., தனபால் ஆகியோர் வந்தனர்.
''இலவச பொருட்கள் எங்கெங்கு இறக்கி வைக்க வேண்டும் என்று தேர்தலுக்கு முன்பே நாங்கள் திட்டமிட்டு விட்டோம். அதன்படி இம்மாவட்டத்துக்கு வரும் ஒவ்வொரு லோடும் குறிப்பிட்ட பள்ளிகள், மண்டபங்கள், அரசு அலுவலக கட்டிடங்களில் இறக்கி வைக்கப்படும். அதன்படி, இந்த லோடு, இப்பள்ளியில் இறக்கி வைப்பதற்கானது. இங்கு இறக்க கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தால், அரசு அலுவலகத்தில் இறக்கி வைத்துக் கொள்கிறோம்,'' என, தாசில்தார் அருணாசலம் கூறி, கலெக்டர் அலுவலகம் நோக்கி லாரியை கொண்டு சென்றனர். இதைத்தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். அதிகாரிகள் மற்றும் போலீஸார் உடனடியாக வந்திருந்தால் இப்பிரச்னை மிக எளிதாக தீர்ந்திருக்கும்.