உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வெள்ளித்திருப்பூரில் 18 டிப்பர் லாரிகள் சிறைபிடிப்பு : கலெக்டர் நடவடிக்கையால் மறியல் வாபஸ்

வெள்ளித்திருப்பூரில் 18 டிப்பர் லாரிகள் சிறைபிடிப்பு : கலெக்டர் நடவடிக்கையால் மறியல் வாபஸ்

அந்தியூர்: அந்தியூர் அருகே வெள்ளித்திருப்பூரில், அதிக பாரம் ஏற்றி சென்ற 18 டிப்பர் லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர். அந்தியூர் சுற்று வட்டாரத்தில் 100க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. இதற்கு தேவையான செம்மண், வெள்ளித்திருப்பூர், கொமராயனூர், சென்னம்பட்டி, சேலம் மாவட்டம் கண்ணாமூச்சி பகுதியிலிருந்து கொண்டு வரப்படுகிறது. வெள்ளித்திருப்பூரிலிருந்து ரெட்டியபாளையம், சனிச்சந்தை வழியாகவும், மூங்கில்பாளையம், குருவரெட்டியூர் வழியாகவும், நாள்தோறும் 100க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் சென்று வருகின்றன. ஒரு டிப்பர் லாரியில் மூன்று 'யூனிட்' மட்டுமே கொண்டு செல்லலாம். ஆனால், ஏழு 'யூனிட்' வரை மண் ஏற்றப்படுகிறது. இப்பகுதி ரோடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

குண்டு குழியுமாக ரோடு மாறியதால் நடந்து செல்லவும் சிரமமாக உள்ளது. குண்டும் குழியுமான ரோட்டில் மெதுவாக செல்லும் டிரைவர்கள் யாரும் இல்லை. இரு மாதங்களுக்கு முன், டிப்பர் லாரியில் அடிபட்டு இரண்டு பெண்கள் இறந்துள்ளனர். லைசென்ஸ் இல்லாதவர்களும், போதை ஆசாமிகளும் லாரி ஓட்டுவதே விபத்துக்கு காரணம் என, அப்பகுதியினர் புகார்களை அடுக்குகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், ரெட்டியபாளையம், மூங்கில்பாளையம் ஊர் பொதுமக்கள், நேற்று காலை 7 மணிக்கு, இவ்வழியாக சென்ற 18 டிப்பர் லாரிகளை சிறை பிடித்தனர்.

பவானி தாசில்தார் வியாசர்பகவான், புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர் பெருமாள், அம்மாபேட்டை இன்ஸ்பெக்டர் பன்னீர் செல்வம் மற்றும் போலீஸார் வந்தனர். பேச்சு வார்த்தையில், 'பழுதான ரோடுகளை சரி செய்யும் வரை, டிப்பர் லாரிகள் இவ்வழியே இயக்க கூடாது' என, பொதுமக்கள் திட்டவட்டமாக கூறினர்.

தக்க நடவடிக்கை எடுப்பதாக கூறிய தாசில்தார், மாவட்ட கலெக்டர் காமராஜிடம் ஃபோனில் பேசினார். 'சாலை சரியாகும் வரை, டிப்பர் லாரியை இயக்க அனுமதி மறுப்பதுடன், மீறி சென்றால் கடும் நடவடிக்கை பாயும்' என, மாவட்ட கலெக்டர் காமராஜ் உத்தரவிட்டதாக, தாசில்தார் கூறினார். இதையடுத்து, ஊர் பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். சிறை பிடிக்கப்பட்ட 18 லாரிகளில், ஐந்து லாரியில் அளவுக்கதிமான செம்மண்ணும், இரு லாரியில் அளவுக்கு மீறிய ஜல்லியும் ஏற்றப்பட்டிருந்தன. மற்ற லாரிகள் காலியாக இருந்தன. லைசென்ஸ் இல்லாமல் லாரியை இயங்கிய நால்வர் மீதும், அளவுக்கு அதிகமான பாரம் ஏற்றி வந்த வாகன உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை