| ADDED : ஆக 11, 2011 03:52 AM
ஈரோடு: ஈரோட்டில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச்சென்ற ஷேர் ஆட்டோ கவிழ்ந்து, ஒருவர் பலியானார்; நான்கு பேர் காயமடைந்தனர்.கரூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (38). ஈரோட்டில் ஷேர் ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று மதியம், பன்னீர்செல்வம் பார்க்கில் இருந்து, பிரப்ரோடு வழியாக பஸ் ஸ்டாண்டுக்கு ஆட்டோவை ஓட்டி வந்தார். ஆட்டோவில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.பிரப் ரோடு, நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன் வந்தபோது, மறுபக்கம் ரோட்டில் டூவீலரில் வந்தவர், வலதுபுறம் திரும்பியதால், ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்தது. அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து, ஆட்டோவுக்குள் இருந்தவர்களை மீட்டனர். படுகாயம் அடைந்த மாணிக்கம் என்பவர் இறந்தார். மதினா, சக்திவேல், அர்ஜூனன், செல்லதுரை ஆகிய நான்கு பேர் காயமடைந்து, ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுமணி விசாரிக்கிறார்.சாதாரண ஆட்டோக்களில் மூன்று பயணிகளும், ஷேர் ஆட்டோவில் ஐந்து பயணிகளும் மட்டுமே செல்ல, வட்டார போக்குவரத்து அலுவலகம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், ஷேர் ஆட்டோக்களில் 10 முதல் 15 பேர் வரை ஏற்றிச்செல்கின்றனர். விதிமுறை மீறி ஏற்றிச்செல்லும் போதுதான், விபத்து ஏற்படுகிறது. போலீஸாரும், போக்குவரத்து துறையினரும் இவற்றை கண்காணிக்க வேண்டும்.