சென்னிமலை: தியாகி குமரன் பிறந்த வீடு பராமரிப்பின்றி கிடக்கிறது. இந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றி, மணி மண்டபம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையில், அரசு மவுனம் காக்கிறது. இந்திய விடுதலைப் போரில் முக்கிய பங்கு தமிழகத்துக்கு உண்டு. கொங்கு மண்டலத்தில் தீரன் சின்னமலை முதல் பல்வேறு தியாகிகள் தனது இன்னுயிர் நீத்துள்ளனர். சுதந்திரப் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்த போது, நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களில், முக்கியமானவர் 'கொடிகாத்த குமரன்' என, போற்றப்படும், தியாகி திருப்பூர் குமரன் ஒருவர்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் 1904 அக்டோபர் 4ம் தேதி, நாச்சிமுத்து - கருப்பாயி தம்பதியினருக்கு முதல் மகனாகப் பிறந்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப் படிப்பை ஆரம்ப பள்ளியிலேயே முடித்துக் கொண்டார். கைத்தறி நெசவுத் தொழிலை செய்து வந்த குமரன், 1923ல் தனது 19வது வயதில், 14 வயது ராமாயியை மணம் முடித்தார்.
கைத்தறி நெசவுத் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால், மாற்றுத் தொழில் தேடி திருப்பூர் சென்று, ஈங்கூர் கந்தசாமி கவுண்டர் நடத்திய மில்லில் எடைபோடும் பணியில் சேர்ந்தார். காந்தி கொள்கையில் அதிக ஈடுபாடு கொண்ட குமரன், நாட்டு விடுதலைக்காக காந்தி அறிவித்த போராட்டங்களில் எல்லாம் கலந்து கொண்டார். 1932 ஜனவரி 10ம் தேதி திருப்பூரில் நடந்த விடுதலைப் பேரணியில், தேசியக் கொடியை பிடித்து, 'வந்தேமாதரம்' கோஷம் முழங்க சென்றார். ஆங்கிலேய போலீஸாரால், மிகக் கடுமையாக தாக்கப்பட்டார். தலையில் பலத்த காயமடைந்த போதும், கையில் பிடித்த தேசியக்கொடி, மண்ணில் வீழ்ந்துவிடாமல் மார்பில் ஏந்தியபடி கீழே சாய்ந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குமரன், மறுநாள் இன்னுயிர் துறந்தார். அவரின் தபால் தலையை 2007ல் மத்திய அரசு வெளியிட்டது. தியாகி திருப்பூர் குமரன் பிறந்து, வளர்ந்த வீடு, சென்னிமலையில் பராமரிப்பின்றி உள்ளது. இந்த இல்லத்தை அரசே ஏற்று, மணி மண்டபம் கட்ட வேண்டும் என, பல முறை அவரின் வாரிசுகள் கோரிக்கை விடுத்தும், அரசு கண்டு கொள்வதாக இல்லை. நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த குமரன் வீடு பாழடைந்து கிடப்பது இப்பகுதி மக்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது. காங்கேயம் எம்.எல்.ஏ., நடராஜ் நடவடிக்கை எடுத்து, மணிமண்டபம் கட்ட வேண்டும் என, அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.