| ADDED : செப் 21, 2011 01:23 AM
ஈரோடு: உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தேர்தல் நடத்தும்
அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ஈரோடு கலெக்டர்
அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் காமராஜ் பேசியதாவது: உள்ளாட்சி தேர்தல்
தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல்
நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை தயார் நிலையில் கொண்டு வர வேண்டும். தேர்தல்
நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள் போன்றோரை தயார்படுத்த
வேண்டியுள்ளது. இந்த அலுவலர்கள், அந்தந்த பகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி
மையங்களில் உள்ள அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பிடம், மின்சாரம்,
மின்விளக்கு, மின்விசிறி, மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து வாக்களிக்கும்
வகையில் சாய்வு தளம் போன்றவை உள்ளதா? என ஆய்வு செய்ய வேண்டும். தேவையான
முன்னேற்பாடுகளையும், குறைகளையும் உடனுக்குடன் நிவர்த்தி செய்ய
வேண்டும்.இம்மாவட்டத்தில் 205 மண்டலங்களாக தேர்தல் நடக்கும் பகுதி நிர்வாக
வசதிக்காக பிரிக்கப்பட்டுள்ளது. அந்தந்த தேவைகளுக்கு ஏற்ப பணிகளை முன்னதாக
செய்து முடிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார். கருங்கல்பாளையம்
காமராஜ் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டுள்ள ஓட்டுப்பதிவு
இயந்திரங்களின் செயல்பாடுகளை அவர் பார்வையிட்டார். டி.ஆர்.ஓ., கார்த்திகா,
மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்திரன், திட்ட இயக்குனர் வித்யாசாகர்,
கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (வளர்ச்சி) சிவகுமார், (உள்ளாட்சி
தேர்தல்) ராஜேந்திரபிரசாத் ஆகியோர் உடனிருந்தனர்.