உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஒதுங்கி இருப்பவர்களுக்கு "சீட்தாராபுரம் அ.தி.மு.க.,வில் அதிருப்தி

ஒதுங்கி இருப்பவர்களுக்கு "சீட்தாராபுரம் அ.தி.மு.க.,வில் அதிருப்தி

தாராபுரம்: தாராபுரம் தொகுதியில், கட்சிப் பணியில் ஈடுபாடு இல்லாதவர்களுக்கு அ.தி.மு.க., தலைமை 'சீட்' வழங்கியதால், கட்சிக்காக உழைத்தவர்கள் விரக்தியடைந்துள்ளனர்.தாராபுரம் நகரம், மூலனூர், குண்டடம், தாராபுரம் ஆகிய மூன்று பஞ்சாயத்து யூனியன்கள், கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், டவுன் பஞ்சாயத்து தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் ஆகிய பொறுப்புகளுக்கு அ.தி.மு.க. சார்பில் விருப்ப மனு பெறப்பட்டுள்ளது. நகராட்சி மற்றும் டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான வேட்பாளர்களை அ.தி.மு.க., வெளியிட்டுள்ளது.இவர்களில், ஒரு சிலர் கட்சியில் உறுப்பினர்களாக இருந்த போதும், கட்சி நடத்தும் ஆர்ப்பாட்டம், மறியல், பொதுக்கூட்டம், செயல்வீரர்கள் கூட்டம் என, கட்சி நிகழ்ச்சிகளுக்கு வராமல், வீடுகளிலேயே முடங்கியிருப்பர். அமைச்சர், எம்.எல்.ஏ., ஆகியோரின் அறிமுகத்தை மட்டும் வைத்துக் கொண்டு, திடீரென தேர்தல் களத்தில் குதித்துள்ளனர். பல ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்தவர்கள், தெருத்தெருவாக அலைந்து போஸ்டர் ஒட்டியவர்கள், கோஷம் போட்டவர்கள், என்றைக்காவது வார்டு கவுன்சிலர் பதவியாவது கிடைக்காதா என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர்.ஒவ்வொரு உள்ளாட்சி தேர்தலின் போதும் விருப்ப மனு கொடுத்து, இறுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் ஏராளமாக உள்ளனர். கட்சிப் பணிகளில் ஈடுபாடே இல்லாமல், அமைச்சர், எம்.எல்.ஏ., ஆகியோரின் ஆதரவாளர்கள் பல்வேறு பதவிகளுக்கு போட்டியிட வாய்ப்பு பெறுகின்றனர்.தாராபுரம் நகராட்சியில் நகரச் செயலாளர் காமராஜ், தனது மனைவி சரோஜினிக்கு நகராட்சி தலைவர் 'சீட்' கிடைக்குமென நம்பியிருந்தார். 'சீட்' கிடைக்காததால், காமராஜ் ஆதரவாளர்கள் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளனர்.குளத்துப்பாளையம், சின்னக்காம்பாளையம் பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு, அந்தந்த பகுதிகளில் செல்வாக்குடன் கட்சிப் பணிகளில் தொய்வின்றி வேலை பார்த்து வந்தவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலி அந்தந்த பஞ்சாயத்து, நகரம், ஒன்றியம் ஆகியவற்றில் எதிரொலிக்குமென உண்மை விசுவாசிகள் பேசி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !