உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அதிகாரி ஆய்வால் சுகாதாரமான அரசு மருத்துவமனை

அதிகாரி ஆய்வால் சுகாதாரமான அரசு மருத்துவமனை

ஈரோடு: ஈரோடு அரசு மருத்துவமனையில் நேற்று, சுகாதாரத்துறை மேம்பாட்டு திட்ட இயக்குனர் பங்கஜ்குமார் பன்ஷால் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அரசு மருத்துவமனையில் செயல்படும் அவசர சிகிச்சை பிரிவு உள்பட சிறப்புசிகிச்சை பிரிவுகள், வார்டுகள், மருத்துவ உபகரணங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். சிகிச்சைகள் குறித்து நோயாளிகளிடமும் விசாரணை நடத்தினார்.அதிகாரியின் ஆய்வை முன்கூட்டியே தெரிந்து கொண்ட அரசு மருத்துவமனை நிர்வாகம், வார்டுகளை சுத்தமாக்கி, மருத்துவ உபகரணங்கள், சிகிச்சைகள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும் என, பணியாளர்களுக்கு உத்தரவிட்டது. பணியாளர்கள் அனைவரும் காலை 6.15க்கு பணிக்கு வந்துவிட்டனர்.ஆய்வின் போது, மருத்துவமனை வளாகம் முழுவதும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் காட்சியளித்தது. மருத்துவச் சீட்டு வழங்கும் இடத்தில், 'நான் உங்களுக்கு உதவலாமே' என்ற புதிய பிரிவை துவக்கி, மூன்று பேர் அங்கு அமர்ந்திருந்தனர்.நோயாளிகளிடம் சிரித்த முகத்துடன் அவர்கள் பதிலளித்ததால், பொதுமக்கள் பலரும் ஆனந்த அதிர்ச்சியடைந்தனர். இதுபோல், தொடர்ந்து அரசு மருத்துவமனை சிறப்பாக செயல்பட, மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரசு மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவப் பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோரின் குறைகளை கேட்டறிந்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், ஆர்.எம்.ஓ., ஜோதிநாதன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.கோபிசெட்டிபாளையம்: கோபி அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை திட்ட இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் திடீரென ஆய்வு செய்தார். ஒவ்வொரு அறையாக ஆய்வு செய்து, கேள்வி மேல் கேள்வி கேட்டதில் டாக்டர்கள் முதல் பணியாளர்கள் வரை அனைவரும் திணறினர்.இன்குபேட்டர் அறைக்குள் செல்லும் போது, காலணிகளை வெளியே விட வேண்டும், கையுறை பயன்படுத்த வேண்டும், என நர்ஸ்களுக்கு அறிவுரை வழங்கினார்.ரத்தப்பரிசோதனை கூடத்தில் ஆய்வு செய்தபோது, ரத்தம் எடுக்கப்பட்ட பிறகு சிரஞ்சிகள் எங்கு போடுகிறீர்கள் என கேட்டார். அறையில் புதிதாக நான்கு குப்பை வாளிகள் வைக்கப்பட்டு இருந்தன. ஒரு பணியாளரிடம், 'ஊசி கழிவுகள் எவ்வாறு போடுவீர்கள்' என்பதை செயல் விளக்கம் செய்து காண்பிக்க சொன்னார்.தலைமை பணியாளர்கள் செயல் விளக்கம் செய்ய வந்தார். அவரை தடுத்த இயக்குனர், மற்றொரு பணியாளரை செயல் விளக்கம் செய்து காண்பிக்க சொன்னார். அவரால், செயல் விளக்கம் செய்து காண்பிக்க இயலவில்லை.மருந்து கழிவுப் பொருட்கள் அறை, மருந்து கொடுக்கும் அறை, புறநோயாளிகள் வார்டு என ஒவ்வொரு அறையாக சென்று ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனைக்கு எலும்பு முறிவு டாக்டர் நியமிக்க வேண்டும் என கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.ஒரு மணி நேரம் நடந்த திடீர் ஆய்வால், டாக்டர்கள், நர்ஸ்கள், பணியாளர்கள் அனைவரும் பதட்டத்துடன் காணப்பட்டனர். மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் ராஜசேகர் உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை